யோ.நிமல்ராஜ் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையில் சாட்சியமளிக்கக்கூடாதென தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொலைபேசிகள் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்தார். மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு சாட்சியமளித்த அருட்தந்தை மேலும் தெரிவிக்கையில்; நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் இக்கட்டானதொரு சூழ்நிலையிலேயே தற்பொழுது வாழ்ந்து வருகின்றோம். இவ்விசாரணையின்போது நான் சாட்சியமளிக்க வந்ததைத் தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்தார்க்கும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. நேற்றைய தினமும் (ஞாயிறு) திருகோணமலையிலுள்ள எனது குடும்பத்தவர்க்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு என்ன நடைபெறுகின்றதென எனக்குத் தெரியவில்லை. கோமா நிலையில் இருந்து கொண்டே சாட்சியமளிப்பதுபோல் நான் உணர்கின்றேன். கடந்த சில நாட்களாக வரும் அச்சுறுத்தல்களினால் நான் எனது சொந்த வீட்டில்கூட இருப்பதில்லை. நானொரு இடத்திலும் குடும்பம் ஒரு இடத்திலுமாகவே உள்ளோம். எனக்கு என்ன நடக்குமென்றே தெரியாது. இவ்வாறான சூழ்நிலையில் சாட்சியமளிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளேன். உண்மையில் சத்தியத்தை கூறவே நானிங்கு வந்தேன். ஆனால் இவ்வாறான மிரட்டல்களால் உண்மையில் நடந்தவற்றைக் கூறமுடியவில்லை. மேலும் யாரை நம்புவது யாரை நம்பக்கூடாதென்பது கூட எனக்குத் தெரியவில்லை. எனக்கு மிரட்டல்கள் இருப்பதால் என்னை புகைப்படமோ வீடியோவோ எடுக்கவேண்டாமென்றும் ஊடகங்களில் பெயரைப் பிரசுரிக்க வேண்டாமெனவும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால் என்னை புகைப்படமெடுக்க அனுமதிக்கக்கூடாதெனத் தெரிவித்த இராணுவத் தரப்புச் சட்டத்தரணியே என்னை புகைப்படமெடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் இடைவேளையின் போது தேநீர் பருகுவதற்குரிய அறைக்கு நான் சென்றிருந்தபோது என்னுடன் கூடவே சாட்சிகள் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மூவர் இருந்தும் குற்றப்புலனாய்வு விசாரணைக்குழுவினரெனக் கூறிய மூவர் என்னை சில கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்தனர். அதாவது நான் மூதூர் தேவாலயத்தில் இருந்தபோது அதாவது 2006 ஆகஸ்ட் முதல் வாரத்தில் யார் அங்கு குருவாக இருந்தவரென்றும் அவர் தற்பொழுது எங்கு உள்ளாரென்றும் கேட்டதுடன், நான் கூறிய விடைகளையும் குறித்துக் கொண்டனர். 2006 ஆகஸ்டில் இச்சம்பவம் நடைபெற்றதனைத் தொடர்ந்து இதுவரை நான்கு வாக்கு மூலங்களை நான் வழங்கியுள்ளேன். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குகின்றேன். இவ்வாறான நிலையில் இன்று (நேற்று) எவரோ வந்து குற்றப்புலன் விசாரணைப் பிரிவென கூறிக்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கின்றனர். என்ன நடைபெறுகின்றதென்பதே தெரியாத நிலையில் நான் உள்ளேன் எனத் தெரிவித்தார். இந்நிலையில் சாட்சிகள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பில் சாட்சி இருந்தபோது குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் எவ்வாறு அறைக்குள் புகுந்து சாட்சியை தொந்தரவு செய்தனரென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலாகம சாட்சிகள் பாதுகாப்புப் பிரிவை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அக்ஷன்பாம் நிறுவனத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் தெரிவிக்கையில்; தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் இருப்பதாக சாட்சி ஏற்கனவே கூறியுள்ள நிலையில், சாட்சிகள் பாதுகாப்புப்பிரிவின் பொறுப்பில் சாட்சி இருந்தும் குற்றப்புலன் விசாரணை அதிகாரிகள் என்றபெயரில் சாட்சியை தொந்தரவு செய்தவர்கள் தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்தார். தொடர்ந்து சட்டத்தரணி எஸ்.இரட்ணவேலின் குறுக்கு விசாரணைகளுக்கு சாட்சி பதிலளிக்கையில்; கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி மதியம் இரண்டு மணியளவில் மூதூரிலுள்ள அக்ஷன்பாம் ஊழியர்களைக் கண்டேன். அதேபோல மூன்றாம் திகதியும் அவர்களைச் சந்தித்தேன். அப்போதெல்லாம் அவர்களை என்னுடன் வந்து தேவாலயத்தில் தங்குமாறு கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் வரவில்லை. இந்நிலையில் மூன்றாம் திகதி காலை 8.30 மணியளவில் நானும் பிரதேச செயலர் மணிவண்ணனும் ஏற்கனவே திட்டமிட்டபடி அரபுக்கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த காயப்பட்டவர்களையும் அம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு நாமிருவரும் மோட்டார் சைக்கிளின் முன்னால் செல்ல எம்மைப் பின்தொடர்ந்து அம்புலன்ஸ் வந்துகொண்டிருந்தது. அப்பொழுது இறங்குதுறைப் பக்கமிருந்து இராணுவத்தினர் சுட்டுக்கொண்டு முன்னேறி வந்தனர். எங்களின் உயிரே போகின்ற நிலையில் நாம் திரும்பி ஓடி வந்தோம். அதன் பின்னர் திரும்பி வரும் போதே அக்ஷன்பாம் ஊழியர்களை அவர்களுடைய அலுவலகத்தில் கண்டு அவர்களை உடனடியாக எம்முடன் வருமாறு கேட்டும் அவர்கள் வரவில்லை. அதன் பின்னர் நான்காம் திகதியன்று காலை ஏற்கனவே திட்டமிட்டபடி அரபுக்கல்லூரிக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு மூதூரை விட்டு வெளியேறும் நோக்குடன் சென்ற போது அரபுக் கல்லூரியிலிருந்து ஏற்கனவே அவர்கள் வெளியேறி விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த நானும் மணிவண்ணனும் திரும்பவும் அக்ஷன்பாம் நிறுவனத்தில் நின்ற பணியாளர்களிடம் நாம் மூதூரை விட்டு வெளியேறப் போகின்றோம் நீங்களும் வாருங்கள் என்று கேட்டும் வரவில்லையெனக் கூறினார். தொடர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நெய்ல் டயஸின் குறுக்கு விசாரணைகளுக்கு சாட்சி பதிலளிக்கையில்; 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூதூரின் நிலைமை மிகவும் மோசமானதாகவே காணப்பட்டது. தொடர்ந்து ஷெல்களும் வீழ்ந்து வெடிக்கும் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. நான் மூதூரை விட்டு வெளியேறி திருகோணமலையிலுள்ள டொக்யர்ட் வீதியிலுள்ள எனது வீட்டிற்குச் சென்ற பின்னரும் இவ்வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருந்தது. ஐந்தாம் திகதி இரவு ஏழுமணிக்கே நான் திருகோணமலையிலுள்ள எனது வீட்டிற்கு வந்தேன். நான் அங்கு சென்றிருந்த போது அவர்கள் பயம் எதனையும் வெளிக் காட்டவில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில் இவ் அலுவலகத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் ஷெல்கள் விழுந்துள்ளது. இவர்களின் அலுவலகம் இதற்கு அண்மையிலேயே உள்ளது. இக்கொலையை இவர்கள் தான் செய்திருப்பார்கள் என நான் யாரையும் சந்தேகிக்கவில்லை, நான் இறுதித் தடவை அக்ஷன்பாம் அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது பெண்களின் முகத்தில் பயம் இருந்தது. ஆனால், அதனை வெளிக்காட்டுவதற்கு அவர்கள் பயந்தார்களென தெரிவித்தார். மேலும், படைத்தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமின் தயாசிறியின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்த சாட்சி; கருணா குழுவுக்கு ஆதரவானவர்களில் தமிழரும் உள்ளனர். முஸ்லிம்களும் உள்ளனர். ஆனால், ஒசாமா குழுவுக்கு ஆதரவானவர்களில் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். நாம் மூதூரிலிருந்து இடம்பெயரும் போது கிராந்திமுனை மலையடியில் நின்ற விடுதலைப் புலிகள் எம்மிடம் ஒசாமா குழுவினரைத் தெரியுமாவென விசாரணை செய்தனர். மூதூரில் ஒசாமா குழுவென்ற ஒன்று இருந்து வந்தது. இவர்கள் தான் தேவாலயத்திலிருந்த குழுவையும் தொந்தரவு செய்து அங்கிருந்து விரட்டினார்கள். இவர்கள் யார், எதற்காக செயற்படுகின்றனரென்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் அரசியல் சார்ந்தவொரு குழு இல்லை. மூதூரிலிருந்த முஸ்லிம்களில் ஊர்காவல் படையைச்சார்ந்தவர்களென்றும் ஒசாமா குழுவைச் சார்ந்தவர்களென்றும் இரு குழுக்கள் உள்ளதாக மக்கள் கதைக்கக் கேள்விப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
Tuesday, 6 May 2008
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment