Thursday, 15 May 2008

ஐ.சூர்யா குற்றப்பார்வை-(15.05.2008)


பொன்னாலையில் மனைவி வெட்டிக் கொலை தலைமறைவான கணவன் தேடப்படுகிறார்:
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் தனது மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாகக் கூறப்படும் கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மூளாய் மேற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரவி தங்கமலர் (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டவராவார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கணவன், மனைவியும் பொன்னாலைக் குளத்துக்குச் சமீபமாக கட்டப்பட்டிருந்த தமது வளர்ப்பு மாட்டுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர்.

மாலை 4 மணியாகியும் இருவரும் வீடு திரும்பாததால் வீட்டார் அவர்களைத் தேடிச் சென்றபோது குடும்பப்பெண் கழுத்தில் பலத்த வெட்டுக் காயத்துடன் குளக்கரையில் சடலமாகக் கிடக்கக் காணப்பட்டார். எனினும் அவருடன் சென்று கணவன் அவ்விடத்தில் இல்லையென்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்

அத்துடன் தலைமறைவாகி விட்டதாகக் கருதப்படும் கணவனை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல்குடா ஜீ.ரீ.சற் கிராமத்தில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை:
கல்குடா ஜீ.ரி.சற் கிராமத்தில் புதன்கிழமை இரவு கடைக்கு முன்பாக வைத்து பொன்னையா சுந்தரலிங்கம் என்பவர் (38 வயது) இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் கிராம அபிவிருத்தி சபைத் தலைவரான இவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு நீதிவான் விசாரணை நேற்று வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் நடைபெற்றது.

வைத்தியசாலையிலுள்ள பிரேத அறைக்குச் சென்று விசாரணை நடத்திய வாழைச்சேனை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் சாட்சிகளை மன்றில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவரின் உடலை அவரது மனைவியான மாணிக்கம் கவிதாவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி அளித்த நீதிவான் மனைவியிடமும் மாணிக்கம் ஜீவரட்ணம் என்பவரிடமும் விசாரணைகளை நடத்தினார்.

இறந்தவர் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உறவினர்கள் நீதிவானிடம் தெரிவித்தனர்.

கொலையாளிகளை உடனடியாக மன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு மேலதிக உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

மாளிகாவத்தையில் இளைஞர் சுட்டுக் கொலை

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

மாளிகாவத்தை , ஜும்மா மஜ்லித் வீதியிலேயே இரவு 8.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 31 வயதானவர் என்றும், இவர் சிகிச்சை பெறும் பொருட்டு மருத்துவ நிலையமொன்றுக்குச் சென்றிருந்த போதே முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் பாதாள உலகத்தினருக்கு தொடர்பு இருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

No comments: