Thursday, 15 May 2008

17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றி நீதிமன்றம் செல்ல எதிர்க்கட்சி முயற்சி

எதிர்காலத் தேர்தல்கள் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாடுவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்ந்து வருகின்றன.

ஜனநாயகக் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட முடியாதநிலை காணப்படுவதாக சிறிலங்கா முஸ்லிம் பிரதிப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். சுதந்திர தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுசேவைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு போன்றன 17வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய நியமிக்கப்படாத நிலையில் எதிர்காலத் தேர்தல்களில் அச்சமின்றி கலந்துகொள்வது சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது காணப்படும் தேர்தல் சட்டமூலத்தில் காணப்படும் ஓட்டைகள் காரணமாகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இவ்வாறு காணப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியதாக காரியப்பர் தெரிவித்தார்.

“தற்பொழுது காணப்படும் நிலையில் எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன” என்று முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் 98 வீதமான வாக்குகள் பலவந்தமாக நிரப்பப்பட்டிருப்பதாக நிசார் காரியப்பர் மேலும் கூறினார்.

No comments: