Saturday, 3 May 2008

கொழும்பில் குண்டுவெடிப்பு: 18 பேர் காயம்

Sunday, 04 May 2008 சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் நேற்று முற்பகல் தனியார் பேருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்துள்ளனர் மொறட்டுவவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த என்.பி 5665 என்ற இலக்கமுடைய பேருந்திலேயே நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றது.

பேருந்திற்குள் வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்று குறித்து பேருந்தின் பயணி ஒருவருக்கும், நடத்துனருக்கும் சந்தேகம் வரவே அது குறித்து சாரதிக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

சாரதியும், நடத்துநரும் மேற்படி பொதி குறித்து சந்தேகம் அடைந்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் அது யாருடைய பொதி எனக் கேட்டுள்ளனர்.

எனினும் அந்தப் பொதிக்கு எவருமே உரிமை கோராததால் அது குண்டுப்பொதி என்று கூறி பயணிகளை பேருந்தை விட்டு இறங்குமாறு அறிவுறுத்தினர். பேருந்தின் சாரதி பேருந்தை கல்கிசைச் சந்தியை அண்மித்த பகுதியில் நிறுத்தவே பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர்.

சாரதியும், நடத்துநரும் பேருந்தை விட்டு இறங்கி சந்தேகத்திற்கிடமான பொதி குறித்து காவல்துறையினரிடம் முறையிடுவதற்கு தயாரானபோதே திடீரென பாரிய சத்தத்துடன் மேற்படி பொதிக்குள் இருந்த குண்டுவெடித்துச் சிதறியது.

குண்டுவெடிப்பில் மேற்படி பேருந்து முற்றாகச் சிதைந்ததுடன் பேருந்தும் தீப்பற்றிக் கொண்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் விரைந்து பாதுகாப்பைப் பலப்படுத்தினர். தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்தன.

இச்சம்பவத்தில் மேற்படி பேருந்திற்கு அருகில் நின்ற நடத்துநரும், சாரதியும் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

"18 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் சிறுமி ஒருவரும் அடங்குகின்றனர்" என்று களுபோவில மருத்துவமனை மருத்துவ அதிகாரி குணவர்த்தன தெரிவித்தார்.

இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து கொழும்பு உள்ளிட்ட சிறிலங்காவின் புறநகர்ப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

1 comment:

ttpian said...

avalatthtai thanthavanukku avalatthai thiruppi tharuhirom!