Saturday, 3 May 2008

வவ்வால் வடிவில் இனி உளவாளிகள்!

அமெரிக்காவிலுள்ள மிசிகன் இன்ஜினியரிங் கல்லூரி விஞ்ஞானிகள் பறக்கும் ரோபோ வவ்வால்களை தயார் செய்துள்ளனர். பறவையை பார்த்து விமானம் படைத்ததுடன் நிற்கவில்லை. இயற்கையைப் பார்த்து விஞ்ஞானிகள் இன்றும் கற்றுக் கொள்வது ஏராளம். வண்டுகளின் கால் அமைப்பு, பறந்து கொண்டே ஓரிடத்தில் நிலையாக நிற்கும் மீன் கொத்திகள் என்று விலங்கினங்களில் உள்ள விஷயங்களை நம் வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளில் புகுத்த முயற்சிக் கின்றனர்.


ஒலி அலைகளை அனுப்பி, அது எதிரொலிப்பதன் மூலம் எதிரில் உள்ள பொருட்களையோ உயிரினங்களையோ அறிந்து வவ்வால்கள் பறக்கின்றன. இந்த ஒலியை நம்மால் கேட்க முடியாது. ஒருவேளை அவற்றை நம்மால் கேட்க முடியும் என்றால் அது ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படுமே அவ்வளவு சத்தத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


உள்ளங்கை அளவில் இருக்கும் வவ்வால்களுக்குள் இவ்வளவு சக்தி பொதிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. பறக்கும் தன்மை உள்ள இந்த ஒரே பாலூட்டி விலங்கின் இந்த தனித்துவத்தை இயந்திரமாக வடிவமைத்ததால் பிறந்ததுதான் இந்த செயற்கை வவ்வால்.ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ரகசியங்களை அறிந்து திரும்ப ரோபோ வவ்வால்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கணித்தனர்.


ஆகவே இதை உருவாக்குவதில் அக்கறை காட்டினர். ஆறு அங்குலம் நீளமும், வவ்வால்களைப் போன்ற இறக்கையும் தோற்றமும் கொண்ட ரோபோ வவ்வால், பறந்து கொண்டே போட்டோ எடுக்கவும் (மனிதர்கள், வாகனங்கள் தெளிவாக தெரியும்), சப்தங்களை பதிவு செய்து அனுப்பவும் (எதிர் படையினர் நெருங்கும் தூரத்தை இதன் மூலம் அறிய முடியும்), வாசனைகளையும் கூட அறிந்து இது தகவல் அனுப்பும். புகை வெளியானாலோ, சம்பவ இடத்தில் இறந்த உடல்கள் கிடந்தாலோ, விஷ வாயு கசிவு, அணுக்கதிர் வீச்சு ஆகியவற்றையும் அறிந்தும் தகவல் அனுப்பும்.செயற்கைக்கோள்கள் வழியாக நாம் பூமியை அங்குலம் அங்குலமாக அறிந்து கொண்டாலும் செயற்கைக்கோள்களால் எல்லாப் பகுதிகளிலும் துல்லியமாக இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள முடியுமா என்பது கஷ்டமே.

No comments: