Monday, 5 May 2008

2007ஆம் ஆண்டு 2 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை மறுத்தது இராணுவம்

கடந்த 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 2 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் ஊடகத் தகவலை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 2 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 4 ஆயிரம் இராணுவத்தினர் காயமடைந்ததாக கடந்த வாரம் இராணுவ உயர் அதிகாரிகளிடம் இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத்பொன்சேகா கூறியிருந்ததாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

“அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும், கடந்த வருடம் இராணுவத்தில் அவ்வளவு இழப்பு ஏற்படவில்லை” என ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்திருந்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டில் 213 இராணுவத்தினரே கொல்லப்பட்டதுடன், 829 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், விடுதலைப் புலிகள் தரப்பில் 5 ஆயிரம்பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு தரப்பினரும் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களைக் குறைத்துக் கூறிவருவதுடன், எதிர்த்தரப்பினரின் இழப்புக்களை அதிகரித்துக்கூறி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளளது.

No comments: