Monday, 5 May 2008

தெற்கில் சீனா வடக்கில் இந்தியா ஈரான் சொல்லும் செய்தி என்ன? - இதயச்சந்திரன்

ஈரான் ஜனாதிபதி முகமட் அகமடி நிஜாட்டின் இலங்கை விஜயம், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசியச் சுற்றுப்பயணத்தின் முதல் அடி, கடல் வழித் தலைவாசலில் அமைந்திருப்பதே இக்கவன ஈர்ப்பிற்கான காரணியாகவும் அமைகிறது.

ஜனாதிபதி மஹிந்த, ஈரான் சென்றார், முகமட் அகமடி நிஜாட்டை அழைத்தார், அதை ஏற்றுக் கொண்டு முகமட் அகமடி நிஜாட் வந்தார் என்கிற சம்பிரதாயபூர்வமான இராஜரீக சொல்லாடல்கள் யாவும், பல உள்ளார்ந்த விடயங்களை புதைத்து விடுகின்றன. அதைத் தோண்டி எடுத்து, தத்தமது நலன்சார்ந்த கோணத்தில் கருத்துரைக்க முனைவது இலகுவானது. அதனைப் புரிந்து கொள்வது மிகச் சுலபமானது.

ஆனாலும் நீண்ட நோக்கிலமைந்த குறிக்கோள்களையும், பூகோளப் பங்கிடுதலையும் இனங்காண, சற்று ஆழமாக உள்நுழைய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் தனது முதன்மையான எதிர்த்தரப்பு இலக்குகளாக அமெரிக்கா சுட்டிக்காட்டுவது ஈரானையும், வடகொரியாவையும்தான். வடகொரிய அணுஆயுத உற்பத்தி விவகாரங்களை விட, ஈரான் மீதே தமது அதீத கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

உலக எரிபொருள் உற்பத்தி நாடுகளில் நான்காவது இடத்தை வகிக்கும் ஈரானின் நகர்வுகளைப் பின்தொடர்ந்து, அப்பாதையில் தரித்து நிற்கும் அரசியல் பிராந்திய அணு ஆயுத வல்லரசாளர்களின் மறைமுக நிலைப்பாடுகளை கணிப்பிட வேண்டிய நிர்ப்பந்தமும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

இப்பாதையில் சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து கொண்டுள்ளதென்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அமெரிக்கா, இலங்கைத் தேசமானது இக்கோட்டினுள் எவ்வாறு பொருந்தப் போகிறதென்பதையும் ஊகித்துக் கொள்கிறது.

அதாவது ஈரான் வழங்கவிருக்கும் இலங் கைக்கான உதவிகள் அனைத்தும், நீண்ட நோக்கில் யாருடைய பிராந்திய நலனிற்கு பயன்படப் போகிறதென்பதை அமெரிக்காவோடு, இந்தியாவும் புரிந்துகொள்ளும்.

குறிப்பாக ஈரானின் பொருளாதார உதவிகள் யாவும் தென்னிலங்கையில் மையம் கொள்வதை அவதானிக்க வேண்டும். அதாவது பிர்லா கொம்பனியின் சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் நிலையம், கைத்தொழில் பேட்டை, தொலைத் தொடர்பு நிலையங்களை இந்திய முதலீட்டுடன் வடக்கு கிழக்கிலும், விமான நிலையம், துறைமுக நிர்மாணம், நீர்மின் திட்டம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சீனா ஈரான் உதவியுடன் தென்னிலங்கையிலும் நிர்மாணிப்பதே அரசின் திட்டம்.

இந்தியாவிற்கு வடக்கையும், சீனாவிற்கு தெற்கையும், முதலீடுகளிற்கான பிரதேசங்களாக வரையறுத்து மேற்குலகிலிருந்து வரும் பொருளாதார அழுத்தங்களை முறியடிக்கும் உத்தியினை இலங்கை அரசு மேற்கொள்கிற தென எதிர்வு கூறலாம்.

அத்துடன் ஈரானிடமிருந்து பெறப்படும் முதலீடுகள் யாவும், சீனாவின் பொருளாதார நலனிற்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் மாறுமென்பதை உறுதியாக நம்பலாம்.

மொனராகல மாவட்டத்திலுள்ள வெள்ளவாயாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள "உமா ஓயா' நீர்மின் உற்பத்தி நிலையம், ஈரான் வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலரில் உருவாக்கப்படவுள்ளது.

100 மெகாவோல்ற் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய திறன் இத்திட்டத்தால் பெறப்படவுள்ளது.

இந்த "உமா ஓயா' மின்சார உற்பத்தி நிலையத்தின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த ஈரானிய ஜனாதிபதி, சப்புகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கு வழங்கப்படும் தொகை, 10 வருட கடன் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், முதல் ஐந்து வருடங்களிற்கு மீளச் செலுத்தப்பட வேண்டிய தொகையினை தவிர்க்கும் சலுகையும் இவ் வொப்பந்தத்தில் இணைக்கப்படும். தற்போது, மசகு எண்ணெய்ச் சுத்திகரிப்பால் பெறப்படும் விளை பொருட்கள் 50,000 இலிருந்து 100,000 பீப்பாய்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உற்பத்தி அதிகரிப்பு ஈரானிய எந்திரவியலாளர்களின் உதவியால் நிறைவேற்றப்பட்டதாக கயோடோ (Kyodo) அறிக்கை குறிப்பிடுகிறது.

அதாவது இன்னமும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சியில் தனது முழுமையான பங்களிப்பினை ஈரான் வழங்கப் போகிறது.

இதன் அடுத்த கட்டமாக திருமலையிலுள்ள எண்ணெய்க் குதங்கள் போன்று, தென்னிலங்கைத் துறைமுகங்களை அண்டிய பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சேமிக்கும் கிணறுகளை தனது செலவில் சீனா நிர்மாணிக்கும்.

எல்லாப் பாதைகளும் றோமை (Rome) நோக்கிச் செல்வதாக, மேற்குலகில் பேச்சு மொழி வழக்கொண்டு உண்டு. ஆகவே சீனாவின் நகர்வுகளை, ஈரானூடாகப் புரிந்து கொள்வது, சில விளக்கங்களைத் தரலாம்.

ஆசியாவின் கடல் வழித் தலைவாசலில் பிரமாண்டமான எண்ணெய் சேமிப்புக் குதங்கள் நிர்மாணிக்கப்படுவது சீனாவின் எதிர்கால சந்தைப் பொருளாதார நலனிற்கு இசைவானதென்பதை அந்நாடு ஏற்கனவே தீர்மானித்து விட்டது.

இந்தியாவின் பிராந்திய நலனோடு முரண்பட்டு, கிழக்கினுள் புக முடியாது. அது உருவாக்கும் சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடாதென்பதில் மிகுந்த அவதானத்துடன் சீனா செயல்படுகிறது. உற்று நோக்கினால், மாலைதீவும், தென்னிலங்கையுமே சீன வலைப் பின்னலில் முதன்மைப்படுத்தப்படும் உணர்திறன் கூடிய மையங்கள்.

1999 ஆம் ஆண்டு மாலைதீவின் பெரியதீவான மறாவோ (Marao) வினைத் தனது கடல் போக்குவரத்து கண்காணிப்பிற்காக குத்தகைக்கு எடுத்தது சீனா. இந்தியாவிற்கு அந்தமான், நிக்கோபார் தீவுகள் போன்று சீனாவிற்கு மறாவோ அமைந்தது. இத் தீவிலிருந்து தமது கடற்படை யுத்தக் கப்பல்களின் நகர்வுகளை, சீனா கண்காணிக்குமென்ற அச்சம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இன்றும் உள்ளது.

அதேபோன்று, ஈரானுடனான பொருளாதார முதலீடு என்கிற போர்வையில் கால் பதிக்கும் சீனா, அங்குமொரு கடல் கண்காணிப்பு நிலையத்தை அமைக்கும் வாய்ப்புகள் உருவாகலாமென்பதை மறுக்க முடியாது.

இவ்வகையான சீன ஈரான் தலையீடுகளால் இலங்கை அரசு பெற்றுக் கொள்ளும் இலாப நட்டக் கணக்குகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

அரசைப் பொறுத்தவரை தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இக்கூட்டணியினரால் வழங்கப்படும் படைக்கல உதவிகளே முக்கிய பாத்திரம் வகிக்கும். அதேவேளை அரசிற்கு இஸ்ரேல் வழங்கி வரும் டோரா படகு, கிபீர் குண்டு வீச்சு விமானம் மற்றும் இராணுவ சாதனங்களிலிருந்து அதன் தொழில்நுட்பங்களை ஈரான் புலனாய்வுப் பிரிவினர் பெற்று விடுவார்களென்பதெல்லாம் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் பூதாகரமாக்கும் புனை கதைகள்.

இஸ்ரேலிய ஏற்றுமதியின், பெரும்பாகத்தை இராணுவ உபகரணங்களும், அதன் தொழில்நுட்பங்களும் ஆக்கிரமித்துள்ளதை பல தேசங்களில் காணலாம்.

இலங்கைக்கு வழங்கும் டோராக்கள், கிபீர்களைப் பார்க்கிலும், அதிசக்தி வாய்ந்த இராணுவ தளபாடங்கள் இஸ்ரேலிடம் உண்டு. சீனாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான ஆதிக்கப் போட்டி பக்க விளைவுகளின் சில உரசல்கள்தான் இவை.

எய்தவன் இருக்க அம்பின் மீது குற்றஞ்சுமத்துவது இலகுவானது.

அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடும் ஈரான், கிபீர் விமானத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள அவசரப்படுவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி, இலங்கை பெறும் உதவிகளை தடுத்து நிறுத்தலாமென கற்பிதம் கொள்வது மடமைத்தனமானதாகும்.

தம்மால் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமாறு இலங்கைக்கு அறிவுரை கூறும் ஈரானின், பண்டமாற்றுப் பரிவர்த்தனை குறித்து அக்கறை கொண்டால், யதார்த்தத்திற்குப் பொருத்தமாகவிருக்கும்.

அத்தோடு ஈரானின் குயிட்ஸ் (Quds) படையினரின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் குவாசெம் சுலைமானி (Bri. Gen. Qassem Suleimani) மேற்கொண்ட இலங்கை விஜயமும், இலங்கை இராணுவத்திற்கு அவர் வழங்கப்போகும் உளவுத்துறைப் போதனைகளும், சமகால நகர்வுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

விரைவாக மாறுதலடையும் தென்னிலங்கை அரசியல் திருப்பங்களின் பின்புலத்தில், கண்ணிற்குப் புலப்படாத மூலசக்தியொன்று வழமைபோன்று தொழிற்படுவதை தரிசிக்க இயலாது. ஆனாலும் சீனா என்கிற பெரும் வல்லரசின் தூரப் பார்வையில், நாடு பிளவுபடப் போவது தெளிவாகத் தென்படுகிறது.

அதனை விடுதலைப் போராட்டத்தின் மையச் சூழல் சக்திகள் புலப்படுத்துவதால் பாதுகாப்பான ஒளிமிகுந்த மறைவிடமாகத் திகழும் தென்னிலங்கை கரையோரங்களில் ஆழமாக வேர் ஊன்றும் நகர்வினை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது சீனா. கண்ணுக்குத் தென்படுவது ஈரான் மட்டுமே. விடுதலைப் புலிகளின் கிழக்குப் பின்னகர்வை அளவு கோலாகக் கொண்டு, பிளவுபடும் சாத்தியப்பாடுகள் உண்டா, இல்லையாவென்கிற கலங்கல் நிலையில் தத்தளிக்கும் மேற்குலகும், இந்தியாவும் ஈரான் வெளிப்படுத்தும் கடினமான செய்திகளை புரிந்து கொள்வார்களாவென்று தெரியவில்லை.

[நன்றி - வீரகேசரி]

No comments: