Tuesday, 6 May 2008

பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு

பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது.

இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது.

சூறாவளி தாக்கிய பகுதிகளை பார்பதற்கே அச்சமாக இருப்பதாகவும், நெல் வயல்கள் முழுவதும் சடலங்கள் நிரம்பிக் காணப்படுவதாகவும், உயிர் தப்பியவர்கள் உணவுக்காகவும் உறைவிடத்துக்ககாவும் தவிப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்றும் வெளிநாட்டு உதவி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் என்று எதிர்பார்க்கப்படும் பணிகளை பர்மாவில் உதவி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

உதவிப் பணிகளில் சிக்கல்
பர்மாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க நாட்டின் இராணுவ அரசு தயங்குகிறது என்று ஐ.நாவின் பர்மாவுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுகான ஒருங்கிணைப்பாளரான கிறிஸ் கே, கூறியுள்ளார்.

எனினும் நிலைமை மாறும் என்று அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாகவும் ஐ.நாவின் அதிகாரி கூறுகிறார்.

இருந்தபோதிலும், அண்டை நாடான தாய்லாந்தில் இருக்கும் ஐ.நா அலுவலர்கள் அவசர உதவியாளர்கள் பர்மா செல்வதற்கான விசாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வது குறித்து எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை செல்வதை அரசு விரும்பவில்லை என்றும் அவர்களை அனுப்புவது குறித்து அரசாங்கம் சந்தேகப் பார்வையே கொண்டுள்ளது என்றும் பர்மிய ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

நாட்டில் சூறாவளியால் பெருத்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும், மற்ற இடங்களில் இந்த வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என பர்மிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: