Tuesday, 6 May 2008

அரசசார்பற்ற நிறுவனங்களில் புலிகள்: கோதபாய ராஜபக்ஷ:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தெற்கில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் தமது ஆதரவாளர்கள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இவ்வாறான புலி செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் செயற்படுத்தப்படும் ஓர் நிறுவனத்தின் பணியாளரான தியாகராஜா பிரபாகரன் என்பவர் சிறியரக பிஸ்டல் ஒன்றை பாதணிகளுக்கு அடியில் மறைத்து புலிகளுக்காக எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது பாதுகாப்புச் செயலாளர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் விடுதலைப் புலிகளிடமும் சம்பளம் பெற்றுக் கொள்வதாக கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் குறித்த நிறுவனங்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும் வன்னியிலிருந்து விடுதலைப் புலிகளை துரத்தியடிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் முகமாலையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து புலிகளுக்குச் சார்பான ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும், இராணுவப் படைத்தளபதிக்கும், தமக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: