ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் வெளிநாடுகளின் தொடர்புள்ளதா என்பதனை அறியும் பொருட்டு 27 நாடுகளுக்கு அனுப்புப்பட்ட கடிதங்களுக்கு 21 நாடுகள் பதிலளிக்கவில்லை என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) பேச்சாளர் ஜி.மொகாந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 16 வருடங்களாகியும் கொலையின் உண்மையான சூத்திரதாரிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஆகிய விடயங்கள் தொடர்ந்தும் மர்மமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்தில் வெளிநாடுகளின் தொடர்புள்ளதா என்பதை அறிவதற்கு விசாரணைகளுக்கு உதவிகோரி 27 நாடுகளுக்கு சட்டபூர்வமான கடிதங்கங்கள் அனுப்பபட்டன. ஆனால், ஆறு நாடுகளே அதற்கு பதில் அனுப்பியிருக்கின்றன.
ஏனைய நாடுகள் எந்தப்பதிலையும் அனுப்பவில்லை. அவை தமது நாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு முடிவை கூறினால்தான் எமது நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"1998 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது பக்கங்களை கொண்ட ஜெயின் கமிசன் அறிக்கையின் படி, கொலைச் சதியை கண்டுபிடிப்பதற்கு மூன்று விடயங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே வெளிநாடுகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டன.
"அதேவேளை சிறிலங்கா, கனடா, மலேசியா, அவுஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்கு விசாரணையாளர்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், உண்மை இன்னும் இருட்டில்தான் கிடக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment