இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சேவையினை வழங்கவுள்ள 5வது நிறுவனமான இந்தியாவின் எயார்டெல், 2008 இன் மூன்றாம் காலாண்டில் தனது சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக, எயார்டெல் நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரி அமாலி நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றதாகத் தெரிவித்திருக்கும் அவர், தமது சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாகவும், உலகத் தரம் வாய்ந்த கையடக்கத் தொலைபேசி சேவையினை வழங்குவதே தமது நிறுவனத்தின் கொள்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொலைத் தொடர்புக்கோபுரங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏனைய நிறுவனங்களுடன் பங்கிட்டுக் கொள்வதே சூழல், சனத்தொகை, மற்றும் தொழிற்சந்தைக்குச் சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ள அமாலி நாணயக்கார, ஆனால் இந்த பங்கிடும் முறையானது இலங்கைக்குப் புதியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் தொலைத் தொடர்புக் கோபுரங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் பொறிமுறை வளர்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிச் சந்தை பெரும் வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 38 வீதமானோரிடமே கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பம் உள்நுழைந்திருப்பதாகவும், ஆனால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இது 50 வீதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தொலைத் தொடர்புச் சந்தையில் மலேசியாவின் மெக்சிஸ் நிறுவனம் பிரவேசித்திருப்பதை வரவேற்றிருக்கும் அவர், இது சந்தையின் போட்டித் தன்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment