கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். |
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கற்பனை உலகில் சஞ்சரிக்கும் இந்த அரசாங்கம் போலியானதொரு தேர்தலை நடாத்தி வெளி உலகிற்கு தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளத் துடிக்கின்றது. இப்போது உள்ள சூழ்நிலையில் கிழக்கில் ஜனநாயக முறையிலான தேர்தல் ஒன்றை நடாத்த முடியாதென தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவருமே ஒருமித்து கூறியிருந்தனர். அது மட்டுமன்றி மூவின மக்களின் முக்கிய பெரும் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி என்பனவும் அரசின் இம் முடிவை ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன. கிழக்கின் இப்போதைய சூழலில் கட்சிகளோ அன்றி அரசியல் தலைவர்களோ சுயாதீனமாக தேர்தல் பணிகளைச் செய்ய முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. தமது மாவட்டத்தில் அலுவலகங்களை இயக்க முடியாது. வீதியோரங்களில் அரசின் ஆசீர்வாதத்துடன் ஆயுதக் குழுக்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுற்றி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களின் மூத்த தலைவர்களான அரியநாயகம் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம் போன்றோர் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. அத்துடன் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் மாங்குளத்தில் ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டார். மற்றும் தமிழர்களின் கிராமத் தலைவர்கள் பலர் பல இம்சைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக கிழக்கில் முஸ்லிம் மக்களது காணிகள் மற்றும் ஏனைய உடைமைகள் பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருகின்றது. போர்ச் சூழ்நிலையாலும், ஆழிப்பேரலையின் தாக்கத்தாலும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 260 பேரின் விபரம் எமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு இதுவரை அரசு பதிலளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை. உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இந்த அரசினால் அபகரிக்கப்பட்டும் இவை தொடர்பில் குறைந்த பட்சம் இந்த அரசு இம் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நட்ட ஈட்டினையாவது வழங்க முன்வரவில்லை. தமது வாழ்வாதாரத்தை தொலைத்து கூழுக்கும் கஞ்சிக்கும் அல்லற்படும் எமது மக்களின் அவல நிலையை இந்த சிங்களப் பேரினவாத அரசாங்கம் ஒருபோதும் கண்டுகொண்டதில்லை. இதை விடுத்து எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமது சுய இலாபம் கருதி இந்தத் தேர்தலை இரும்புக்கரம் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்குள் திணித்துள்ளது. இதை நாம் நன்கு புரிதல் அவசியம். எமது கல்வி, கலை கலாச்சாரம், பொருளாதாரம், உட்கட்டுமானம் அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. மக்களின் உள்நாட்டு சுயதொழில்களான விவசாயம், மீன்பிடி, சிறுகைத்தொழில் போன்ற வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்தல், மக்களுக்குப் போலியான ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்யும் இந்த சிங்கள அரசின் கபட நாடகம் என்பதை நாம் உணர வேண்டும். கிழக்கு எமது தாயக பூமி. இதை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. பல நூற்றாண்டு காலமாக எமது தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமி. இது ஒரு வகையில் சிங்கள அரசின் சூழ்ச்சியில் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கின்றது. பிரதேச வாதம் எனும் கருவியை கையில் எடுத்தும், தமிழ் பேசும் சமூகங்களுக்கு இடையிலான சில முரண்பாடுகளை வைத்துக்கொண்டு தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு இடையில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து அதில் குளிர்காய்வதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இந்நிலையில் கிழக்கின் தமிழ் பேசும் சமூகங்கள் கடந்த கால பகையுணர்வுகளை மறந்து புதியதொரு உலகை நோக்கிப் போகின்ற, புதிய அரசியல் கலாசாரத்தைப் பற்றி சிந்திக்கின்ற ஒரு காலமாக இந்தக் காலத்தை நாம் மாற்ற வேண்டி இருக்கின்றது. இப்படியான துன்ப துயரங்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு இன மக்களுக்கும் தேர்தல் ஒன்று தேவைப்படவேயில்லை. யாரும் கோரவும் இல்லை. ஆனால், அரசுக்கு தேர்தல் தேவைப்படுகின்றது. இந்தத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் தனது பொம்மை அரசைக் கொண்டு மாகாண அபிவிருத்தி என்ற பெயரில் பெருநதொகை உதவிகளை கடனாகவும், நன்கொடையாகவும் வெளிநாடுகளிலிருந்த பெற்று அப்பணத்தை போருக்குச் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த அரசின் இவ்வாறான கபடத்தனத்திற்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் துணை போகக்கூடாது. இந்நிலையில் வட கிழக்கு மக்களுக்கு என உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் வரலாற்றை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை புறம்தள்ளி அவர்களின் இருப்பையே அழித்தொழிக்கும் பௌத்த, சிங்கள பேரினவாத சிந்தனையோடு கொடூர மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலும் மகிந்த அரசின் திமிர்ப் போக்கும், போர்த் தீவிரமும் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் தம்மை ஜனநாயகத்தின் காவலர்களாக காட்டிக்கொள்வது நகைப்பிற்குரியது. இலங்கையின் தற்போதைய அரசுத் தலைமையின் கீழ் பங்காளியாகவுள்ள சில கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்வதற்கு வெட்கக் கேடான விதமாக இனவாதம், பிரிவினைவாதம் மற்றும் அடாவடித்தனங்களை பயன்படுத்தி தம்மையும், ஒட்டுமொத்த நாட்டையும் நாசப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றமை கவலைக்குரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Wednesday, 7 May 2008
"கிழக்கின் விடியல்" பேரில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சந்திரநேரு சந்திரகாந்தன்-puthinam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment