Wednesday, 7 May 2008

நாடாளுமன்ற ஒத்திவைப்பும்: சட்டச் சிக்கல்களும்: அரசியல் சூழ்சியும்: செய்தி ஆய்வு:

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதனை அடுத்து குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலம், காலம் தாழ்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.


இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயும் குழு எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, ஜெனீவாவில் கூடவுள்ளது. அந்த கூட்டத்தின் போது சமர்ப்பிக்கக்கூடிய வகையில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த வரைவுத்திட்ட பிரேரணையை, சட்டமூலமாக அமுல்படுத்தும் நோக்கில் மனித உரிமைகள் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்டது. குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டோர், மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் இந்த வரைவுத் திட்ட சட்டமூலம் தொடர்பாக, கடந்த மே 2ம் திகதி நீதிமன்றின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கென விசேட அதிகாரசபை நிறுவப்பட உள்ளதாகவும், காவற்துறைத் திணைக்களத்தின் தனிப் பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பதில் சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் மூலம் மே மாதம் 13ம் திகதிக்கு முன்னதாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் அமர்வுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 5ம் திகதிக்கு பின்னர் கூட்டுமாறு மனித உரிமைகள் அமைச்சு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

மறுபுறம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, தற்போது நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கள், ஆலோசனை சபை என்பன ரத்துச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட அனைத்து சட்டமூல யோசனைகளும் ரத்துச் செய்யப்படும். குறிப்பாக கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பொது நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரச கணக்காய்வு தெரிவுக்குழு என்பனவும் ரத்துச் செய்யப்படவுள்ளன.

மேலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சில அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஜனாதிபதி ஒத்திவைத்ததால், இவை தொடர்பான அனைத்து யோசனைகளும் ரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த முனைப்பு எதிர்வரும் தேர்தலில் இடம்பெறப்போகும் துஸ்பிரயோகங்களை மறைப்பதற்கான ஏற்பாடு என ஐக்கிய தேசிய கட்சியின் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது ஜனநாயக விரோத செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை கிழக்கு மாகாணத்தில் வெற்றிப்பெறப்போகும் சந்தப்பத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையிலான முனைப்பாகவே இதனை கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மற்றும் நாட்டில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ள நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கமுடியாது என தெரிவித்த ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இது ஜனநாயக நடைமுறைகளுக்கு விழுந்த பாரிய அடி எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசியல் லாபங்களைக் கருத்திற் கொண்டு பாராளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி ஒத்தி வைக்கவில்லை என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற முறைமையை பின்பற்றும் நாடுகளில் பாராளுமன்ற அமர்வு ஒத்தி வைப்பு ஓர் வழமையான நிகழ்வாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்பட்டதன் மூலம் எந்தவொரு தெரிவுக்குழுவும் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், ஆலோசனை செயற்குழுக்கள் மாத்திரமே ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா அப்போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நாடாளுமன்றை ஒத்திவைத்தார். இதன் பின் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: