Tuesday, 27 May 2008

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளிடமிருந்து கிடைத்த பரீட்சை விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பரீட்சார்த்திகளுக்குரிய சுட்டிலக்கம், பரீட்சை மண்டபங்கள், மேற்பார்வையாளர் பற்றிய விபரங்கள் தயாராகிவிடும்.

பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விபரங்களை பாடரீதியாக தரம்பிரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சை மேற்பார்வையிலும் மதிப்பீட்டுப் பணியிலும் ஈடுபடுபவர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பரீட்சை மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாமென பிரசாரம் மேற்கொண்டு வருகின்றமை குறித்து எனக்குத் தெரியாது.

பரீட்சைத் திணைக்களம் 12 வருடகால பழைமை வாய்ந்த தொழில்நுட்ப சாதனங்களையே பரீட்சை மதிப்பீட்டுக்காக பயன்படுத்துகிறது. பரீட்சை முடிவுகள் தாமதமாக வெளியாவதற்கு இதுவுமோர் காரணமாகும்.

இந்நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன் கல்வியமைச்சின் உதவியுடன் பரீட்சைகள் திணைக்களம் 55 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன கணினி உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளது. இதன்மூலம் பரீட்சை முடிவுகளை துரிதமாக வெளியிட முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

No comments: