தாய்லாந்திடமிருந்து இலங்கை 50,000 தொன் அரிசியினை இறக்குமதி செய்யவுள்ளதாக தாய்லாந்தின் வர்த்தக அமைச்சரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது
உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்திடமிருந்து, இலங்கை மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுக்கு 95,000 தொன் அரிசியினை ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை அதிகாரிகள் கடந்த வாரம் பாங்கொக் நகரில் தம்மைச்; சந்தித்து 50,000 தொன் அரிசி தேவைப்படுவதாகக் கூறினர்” என தாய்லாந்து வர்த்தக அமைச்;சின் வெளிநாட்டு வர்த்தகத் திணைக்கள அதிகாரியான அபிராடி தன்ரபோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த வருடம் தாய்லாந்திடமிருந்து 3,499 தொன் அரிசியினையும், கிழக்கு திமோர் 17,234 தொன் அரிசியினையும் கொள்வனவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் மாத்திரம் 4.2 மில்லியன் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் இதன் காரணமாக குறைந்த விலையில் அரிசியை விற்கமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தாய்லாந்து வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் தாய்லாந்திலிருந்து 9.4 மில்லியன் தொன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும், 2008 இல் 9 மில்லியன் தொன் அரிசியினையே ஏற்றுமதி செய்ய எண்ணியுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் தாய்லாந்து 4.06 மில்லியன் தொன் அரிசியினை வெளிநாகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் மியன்மாரிடமிருந்து அரிசியினை இறக்குமதி செய்ய எண்ணியிருந்த போதிலும், சூறாவளியினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக அது தடைப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரிலிருந்து இலங்கைக்கு அரிசியினை ஏற்றிவரும் 3 கப்பல்கள் அங்கு ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்படவில்லை எனவும், அவற்றில் இரண்டு கப்பல்கள் அரிசியினை ஏற்றிவருவதற்கு உடனடியாகத் தயார் நிலையில் இருப்பதாகவும் இலங்கை வர்த்தக அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.கே ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment