*சிங்களவர் விழிப்புடனிருக்க வேண்டும்; தேசப்பற்று தேசிய இயக்கம் எம்.ஏ.எம்.நிலாம் வடக்கை தமிழர்களுக்கும், கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்த்து தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ள பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இத்தருணத்தில் சிங்கள மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அரச பலத்துக்கும் தேசத்துரோகிகளின் பலத்துக்குமிடையிலான போராகவே காணப்பட வேண்டியுள்ளதாகவும் சிங்கள மக்கள் ஒன்று படுவதன் மூலமே இதனை முறியடிக்க முடியுமெனவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர்மாநாடு நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் தேசிய நூலகச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதன் தலைவர் குணதாச அமர சேக்கர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கிழக்குமாகாணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றது. கிழக்கை முஸ்லிம்களின் தாயகமாக பிரகடனப்படுத்திக் கொள்வதில் முஸ்லிம் தரப்பு முனைப்புக் காட்டி வருகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி துணைபோய்க் கொண்டிருக்கின்றது. இதேபோன்று நாளை வடக்கை முழுமையாக தமிழர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க அரசாங்கத்தரப்பு தயாராகி வருகின்றது. இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் இதனை கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? கிழக்குத் தேர்தலில் சிங்கள மக்கள் தெளிவான சிந்தனையுடன் செயற்படத் தவறினால் இந்த நாடு பிளவு படுவதை யாராலும் தடுக்க முடியாது போகலாம். நாளை நிச்சயமாக வடக்கு கிழக்கின் எல்லைப்புறங்களிலிருந்தே சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்படலாம். இனிமேலும் மௌனமாக இருக்கமுடியாது. கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் இருப்புக்குச் சவாலாகவே இத்தேர்தல் காணப்படுகிறது. எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜே.வி.பி.யிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ புதிய கட்சி அமைக்கப் போவது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த அமரசேக்கர விமல் வீரவன்ஸ புதிய கட்சி அமைப்பதற்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாதெனவும் எமது இயக்கமானது சுயாதீனமானதெனவும் குறிப்பிட்டார். நாட்டுக்கு நல்லதைச் செய்வோரை ஆதரிப்போம், விமல் வீரவன்ஸவின் புதிய கட்சி நல்லதைச் செய்தால் நிச்சயம் அதனை ஆதரிப்போம். ஆனால் புதிய கட்சி ஆரம்பிக்கப் படுவதற்கும் எமது இயக்கத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.
Thursday, 1 May 2008
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி--தேசப்பற்று தேசிய இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment