122 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தினமொன்றுக்கு 8 மணித்தியால நேர வேலை கோரிப் போராடிய தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தத்திலும் வியர்வையிலும் பிறந்ததுதான் மே தினம். இந்த சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒருமைப்பாட்டுத் தினம் தொடர்பான சமகாலக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அதன் அடிப்படை அர்த்தத்தை இழந்து பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலின் பிரச்சினைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் நிலைப்பாடுகளைப் பிரசாரப்படுத்துவதற்குக் களம் அமைக்கும் தினமாக மாற்றப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உலகம் பூராவுமுள்ள தொழிலாளர்கள் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் விடுதலைக்கான போராட்டங்களில் தங்களை மேலும் கூடுதல் உறுதிப்பாட்டுடன் அர்ப்பணிப்பதற்கான இன்றைய தினத்தில் இலங்கையில் ஒரு சில இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, ஏனைய கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கின்ற கூட்டங்கள் வெறுமனே கேளிக்கைத் தன்மைவாய்ந்தவையாகவே காணப்படுகின்றன. இன்று இலங்கையில் மே தினக் கொண்டாட்டங்கள் முற்றாகவே மாறிவிட்டன. வெறும் அரசியல் பிரசார மேடைகளுக்கான இன்னொரு வசதியான சந்தர்ப்பமாக மே தினம் மாறியிருக்கிறது. நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினரும் விவசாயிகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதில் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை நாட்டம் செல்வதாக இல்லை. பாதுகாப்பைக் காரணம் காட்டி தலைநகர் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் பெரிய கட்சிகள் ஊர்வலங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்திருக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரசாரத்துக்கான ஒரு களமாக மே தினத்தை மாற்றியிருக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் கூட்டத்தை அம்பாறையில் நடத்துகிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மதவழிபாட்டுடன் மே தினக் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்தத் தீர்மானித்திருக்கிறது. மூன்றாவது பெரிய கட்சியென்று வர்ணிக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) கொழும்பு மாநகர மைதானத்தில் அதன் கூட்டத்தை நடத்துகிறது. வேறு பல கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மே தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றபோதிலும், இன்று நாட்டில் தோன்றியிருக்கின்ற முன்னென்றுமில்லாத அரசியல், பொருளாதார நெருக்கடிகளினால் நாட்டு மக்கள் படுகின்ற அவலங்களை தணிப்பதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக் கூடியதாக மக்கள் சக்தியைத் திரட்டுவதற்கான அரசியல் ஐக்கியம் எதிரணிக் கட்சிகளிடையே இல்லை. ஒட்டுமொத்தத்தில், முன்னைய நாட்களின் செம்மேதினத்தின் உணர்வுகளை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட ஒரு கால கட்டம் இருந்தது. தொழிலாளர் வர்க்கம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான அடிப்படை அரசியல் காரணிகளை வர்க்க உணர்வுடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனேயே அந்த வலியுறுத்தல் எழுந்தது. ஆனால், இன்று அந்த நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக, தொழிற்சங்க இயக்கம் கட்சி அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இன, மத பேதங்களுக்கு அப்பால் தொழிற்சங்க இயக்கம் செயற்பட்ட காலம் மாறி இனவாத அரசியலின் நிலைக்களனாக அவ்வியக்கம் மாற்றப்பட்டிருக்கிறது. மக்களைத் திணறவைத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டிய தற்போதைய தருணத்திலே, தொழிற்சங்க இயக்கம் அதன் வீரியத்தை இழந்து கிடக்கும் பரிதாபநிலை. இத்தகையதொருபின்புலத்தில் தான் மேதினக் கொண்டாட்டங்களின் சீரழிவை நோக்க வேண்டியிருக்கிறது.
Thursday, 1 May 2008
மே தினக் கொண்டாட்டங்களின் இன்றைய நிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment