சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பவருமான பஷீர் சேகுதாவூத் ஐ.என்.எல் லங்காவுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
இந்த தேர்தலில் ஜனாநாயக விழுமியங்கள் முடித்துக் கட்டப்பட்டுள்ளன. மிகவும் மோசமான வன்முறைகளும் மோசடிகளும் வாக்குக் கொள்ளைகளும், திருகுதாளங்களும் தில்லுமுல்லுகளும் நிறைந்த ஒரு தேர்தல் இது.
1980 களிலிருந்து இன்று வரை பல்வேறு தேர்தல்களில் பங்குபற்றியிருக்கின்ற நான், இவ்வாறான ஒரு படுமோசமான மக்கள் விரோத, ஜனநாயக விரோத தேர்தலைச் சந்தித்தில்லை.
இவ்வாறுதான் இந்தத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என மூடிய அறைகளுக்குள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கச்சிதமாக இந்தத் தேர்தல் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை கிழக்கில் நடத்தி முடிப்பதற்கு இவ்வாறான ஒரு வெற்றி அரசாங்கத்துக்கு அவசியப்பட்டது. அதனைத்தான் அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நீங்கள் இப்படிச் சொன்னாலும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தல் சரியாகவே நடந்து முடிந்திருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார்களே..?
சரியாக நடந்தது என்று அவர்கள் சொல்லவில்லை. எமக்கு ஆளணி போதாது எனச் சொல்லிவிட்டு, இருந்தாலும் இந்தத் தேர்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
சர்வதேச கண்காணிப்புத்தான் தேர்தலுக்கான சர்வரோக நிவாரணி அல்ல. அவர்களின் புல எல்லைகள் மிகக் குறுகியது. மிகப் பிரமாண்டமான நிலப்பரப்பில் நடைபெற்ற இந்தத் தேர்தலை மிகக் குறுகிய எண்ணிக்கையுடையவர்களால் கண்காணிக்க முடியாது.
நாம் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நிராகரிக்கிறோம்.
தேர்தல் மோசடிகளுக்கெதிராக போராடப்போவதாகச் சொல்லியிருந்தீர்கள். தற்போது எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
தேர்தல் வன்முறைகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். ஏற்கனவே ஐ.தே.க தலைவரும், மு.கா தலைவரும் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடியிருக்கின்றனர்.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டபோதிலும் கூட, இந்தத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து அவர் புரிந்துகொண்டிருக்கிறார்.
மூன்று மாவட்டங்களிலும் அளிக்கப்பட்ட வாக்கு வீதங்களின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை குறித்து புள்ளிவிபர ரீதியாக ஆணையாளருக்கு விளக்கிக் கூறியிருக்கிறோம்.
அம்பாறையின் சில பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் 98 வீதம், 96 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு வாக்களிக்கப்படுகின்ற வரலாறு நமது நாட்டில் இல்லை.
மிக நீண்ட அனுபவம் கொண்ட தேர்தல் ஆணையாளருக்கு இதன்பின்னணி குறித்து புரிந்து கொள்வது கடினமானதொன்றல்ல.
இந்தத் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லத்தயாராகவிருக்கிறார்கள். அதனடிப்படையில் நாம் வழக்குத் தாக்கல் செய்து நீதியைப் பெறுவதற்கான முடிவில் இருக்கிறோம்.
நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
நீதித்துறை என்று வரும்போது அதற்கு சுயாதீனமானதொரு தன்மை இருக்கிறது.
இலங்கையில் நீதித்துறை அரச அதிகாரத்துக்கு முழுவதுமாக அடிபணிந்து போனது என்று எம்மால் சொல்லமுடியாது.
ஆகவே இந்நாட்டில் நீதித்துறையிடம் சென்று நீதிகேட்பதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை. எமக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.
தேர்தல் ஆணையாளருடைய சாட்சியங்களும் இதில் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும் என நம்புகிறோம்.
ஹிஸ்புல்லாவுக்கும் பிள்ளையானுக்குமிடையிலான முதலமைச்சர் போட்டியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள். முஸ்லிம் அமைச்சர்களெல்லாம் ஹிஸ்புல்லாவுக்கே வழங்கப்படவேண்டும் என்கிறார்களே..?
இது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் உள்ள உள்வீட்டுப் பிரச்சினை. அவர்களிடையேயான உடன்பாடு மற்றும் வாக்குறுதியை நம்பியமை தொடர்பான பிரச்சினை.
நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். பதவி நிலை சார்ந்த ஒரு போட்டியாக இந்தத் தேர்தலை நாம் மாற்றவிரும்பவில்லை என்று.
கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிர்காலத்தில் இழைக்கப்படுகின்ற அநீதியை தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகத்தான் இந்தத் தேர்தலைப் பார்க்கிறோம் என நாம் கூறியிருந்தோம்.
ஆகவே, இந்தப் போட்டியை அவர்களே அவர்களுக்குள் வைத்துக் கொள்ளட்டும். இந்தப் போட்டியில் யார் வெல்வது அல்லது தோற்பது என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.
ஹிஸ்புல்லாவோ அல்லது பிள்ளையானோ முதலமைச்சராக வருமிடத்து அவர்களால் எந்தளவு சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவிருக்கும்?
ஹிஸ்புல்லாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானாகவிருந்தாலும் சரி அவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கையெழுத்திடுகின்ற பொம்மையாகவே இருப்பார்கள் என்பதே தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னருமான எமது நிலைப்பாடாகவிருக்கிறது.
தற்பொழுது முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வது குறித்துப் பேசுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக இதனைத்தான் நாம் அன்று செய்தோம்.
இந்த அரசாங்கம் கிழக்கில் முன்னெடுக்கப்போகின்ற சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அஞ்சி, அதற்கெதிராகப் போராடியாகவேண்டும் என்பதற்காகத்தான் நாம் எமது அமைச்சுப் பதவிகளை ராஜினாமாச் செய்தோம்.
39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பிக்குக் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஜனாதிபதியா நமக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போகிறார்?
தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக கட்சிகளைப் பிளவுபடுத்தல் எனும் தந்திரோபாயத்தை அரசாங்கம் செய்து வருகிறது. அதில் ஒரு கட்டம்தான் இன்று ஜே.வி.பிக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நீங்கள் ஒரு முஸ்லிம் என்ற வகையில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பது கூட உங்கள் விருப்பமில்லையா?
முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வராமல்விடுவது நல்லது எனும் நிலைப்பாடு எமக்கு இல்லை. வந்தால் நல்லதுதான். அதையும் விட ஆகக் குறைந்தது கிழக்கில் தற்போதுள்ள இனச் சமநிலையைப் பேணுவதற்குப் போராடுகின்ற ஒரு தைரியமுள்ள முதலமைச்சர் வரவேண்டும் என்பதே எமது விருப்பம்.
மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றிணைந்தால் ஆட்சியமைக்கலாம் என்ற கருத்தொன்றும் முன்வைக்கப்படுகிறதே?
இல்லை. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை போதாது. மொத்தமாக 17 முஸ்லிம் பிரதிநிதிகள்தான் இருக்கிறார்கள். மாத்திரமன்றி இப்படியான ஒரு இணைவு வரும்பட்சத்தில் மறுபுறம் தமிழ்-சிங்கள பிரதிநிதிகள் ஒன்று சேரக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
அப்படிப்பார்த்தால் தனியே தமிழ், தனியே முஸ்லிம் என்ற பார்வையும் வந்துவிடும். அது ஒரு ஆபத்தான நிலைமை.
இல்லாவிடின், 17 முஸ்லிம் பிரதிநிதிகளையும் கொண்டு, ஏனைய ஓரிரு தமிழ் அல்லது சிங்களப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கமுடியுமா என்றும் நாம் சிந்திக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புக்களெல்லாம் மிகக் குறைவு.
அப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் ஆட்களைத் தனிநபர்களாகப் பிரித்தெடுக்கின்ற சூழ்ச்சியை அரசாங்கம் மேற்கொள்ளும். அதில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் பெரும் விற்பன்னர்கள். துறைசார்ந்த வல்லுனர்கள். இந்தச் சதிகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிவந்திருக்கிறோம்.
எவ்வாறெனினும், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுடைய போராட்டத்தில் நாம் துணிவுடன் ஈடுபடுவோம். இந்தத் தேர்தல் முடிவும் இன்னும் கூடுதலாகப் போராட வேண்டும் என்ற உற்சாகத்தையே எமக்குத் தந்திருக்கிறது. இது எமக்குத் தோல்வியல்ல.
தேர்தலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமாச் செய்த நீங்கள் மீண்டும் அதனை ஏற்றுக் கொள்வது பற்றிய யோசனை இருக்கிறதா?
இது காலத்திற்கு முந்திய கேள்வி என்று நினைக்கிறேன். இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். தேர்தலுக்குப் பிந்திய குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் அது குறித்து ஆழமாக யோசிக்கவேண்டியிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதற்கான விடை தெரிந்துவிடும்.
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் அதிகாரத்திற்கு வருவதனூடாக நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அலகு எனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கனவு நிறைவேறுமா?
அஷ்ரபின் கனவை நனவாக்குவது பேச்சுவார்த்தையால் மாத்திரமே முடியும். ஆனால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் பேச்சுவார்த்தைக்கான சூழல்கள் இருக்குமாகவிருந்தால் அதற்கான வியூகங்களை அமைத்து செயற்படலாம்.
இந்த அரசாங்கத்திடம் சென்று நிலத்தொடர்பற்ற அடிப்படையிலான முஸ்லிம் அலகு எனும் விடயங்களைப் பேசுவதை விடவும், பேசாமல் இருப்பதே அதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்குச் சாதகமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்.
ஜாதிக ஹெல உறுமயவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அவ்வாறான பேச்சுக்கள் நடைபெறுவதென்பது கஷ்டமானதும் கூட. இன்று கூட தீகவாபி நிலங்களை முஸ்லிம்கள் அபகரிக்கிறார்கள் என்று கூறி ஹெல உறுமய வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது.
முஸ்லிம்களை அரசியல். சமூக, பொருளாதார ரீதியாக சீரழிப்பதற்கான வேலைத்திட்டங்களையே இன்று ஹெல உறுமய செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகத்தான் முஸ்லிம் அரசியல் இயக்கத்தையும் நலிவடையச் செய்கின்ற சிதைவடையச் செய்கின்ற நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
கிழக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என ஹெல உறுமய சொல்வது பற்றி?
அதனோடு சேர்த்து இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்கள். கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று.
கிழக்கைப் பொறுத்தவரைக்கும் அவர்களிடம் இரண்டு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. முதலாவது இராணுவ ரீதியாக வெல்வது, அடுத்தது அரசியல் ரீதியாக வெல்வது.
இராணுவ ரீதியான போராட்டத்தை இராணுவமும் புலிகளும் பாரத்துக்கொள்வார்கள். ஆனால் அரசியல் ரீதியாக வெல்வதற்கு தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.
இராணுவ ரீதியான வெற்றியைத் தக்கவைப்பதறகு அரசியல் ரீதியான வெற்றி முக்கியமானது. அரசியல் ரீதியான வெற்றியைத் தக்கவைப்பதற்கு சிங்களவர்களைக் குடியேற்றுவது முக்கியமானது. இதனையே பரிபூரணமாகக் கிழக்கில் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். கிழக்கு மாத்திரமல்ல. கிழக்கை முடித்துவிட்டு வடக்குக்கும் செல்வார்கள்.
ஆரம்பத்தில் கிழக்கில் ஆயுத ரீதியான எதிர்ப்பு ஒன்று இருந்ததன் காரணமாக அவர்களால் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இனி சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது இலகுவாகவிருக்கும்.
செவ்விகண்டவர் பைரூஸ்

No comments:
Post a Comment