Wednesday, 7 May 2008

கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவர்

* பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதியான நம்பிக்கை

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவர்கள் என்ன தான் தலைகீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் செய்யத் தயாராகியுள்ளது. கிழக்குப் பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர்கள் எல்லாம் தற்போது கிழக்கில் முகாமிட்டுள்ளனர். கிழக்கை அபிவிருத்தி செய்யப் போவதாக முழக்கமிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் தலைவிதி தமிழ், முஸ்லிம்களின் கைகளிலேயே உள்ளது. இம்மக்களை எதிர்த்துக் கொண்டு எந்த சக்தியாலும் வெற்றி பெற முடியாது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இதனை அரசுக்கு தமிழ் மக்கள் உணர வைப்பார்கள். அரசாங்கம் தோற்கடிக்கப்படும்.

ஏற்கனவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதொரு திட்டத்தை மீண்டும் அரசு தூசி தட்டி சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் முட்டாளாக்கப் பார்க்கின்றது. இதற்கு ஒருபோதும் தமிழ் மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.

துரைரெட்ணசிங்கம்

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகளவிலான இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் பின்னர் மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கே வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்தப்பட்டு நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்த நிலையிலுள்ளனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோமலை மாவட்ட பராளுமன்ற உறுப்பினரான துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் கூறியதாவது;

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திருகோமலை மாவட்டத்தில் பல கூத்துகள், நாடகங்கள், யுக்திகள் அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் வாக்குகளை பலவந்தமாகப் பெறுவதற்கு அரசு முயன்று வருகின்றது.

திருகோணமலையில் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய முயற்சித்த போதும் முடியவில்லை. இறுதியில் அப்பிரதேசத்தின் அரச கட்சி அமைப்பாளர் மூலம் அந்த இளைஞர்கள் நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது எவ்வளவு கேவலமானதொரு செயல்.

இதேபோன்று திருகோணமலை நகர சபைத்தலைவர், உபதலைவரை திருகோணமலை ஹோட்டலொன்றிலுள்ள அமைச்சர்கள் சிலர் சந்திக்க விரும்புவதாகக் கூறி அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அங்கே சென்றபோது திருகோணமலையில் தாம் செய்த சில அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நன்றி கூறுமாறு வற்புறுத்தப்பட்டனர்.

அந்தக் ஹோட்டல் அறையில் ஏற்கனவே, ஊடக படப்பிடிப்பாளர்கள் சில அரச ஊடகச் செய்தியாளர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர். அவ்வாறு வலியுறுத்திப் பெறப்பட்ட நன்றி இன்று அரச ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளன.

திருகோணமலையில் மழை, வெள்ளங்கள் பல அனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்து அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட மறுத்த அமைச்சர்கள் பலர் இன்று வாக்கு வேட்டைக்காக அப்பகுதிகளெங்கும் கும்பிட்டவாறு திரிகின்றனர்.

தமிழ், முஸ்லிம்கள் நிறைந்த எமது பிரதேசத்தில் சிங்கள வேட்பாளரையே முதன்மை வேட்பாளராக அரசு நியமித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் ஒரு கடற்படைத் தளபதி. திருமலை மாவட்ட அரச அதிபர் ஒரு இராணுவத் தளபதி. இதுதான் அரசின் மக்களாட்சியா எனக் கேட்க விரும்புகிறேன்.

ஜெயானந்தமூர்த்தி

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு தக்கபாடம் புகட்ட தமிழ் மக்கள் காத்திருப்பதால் அரசாங்கம் தேர்தலில் படுதோல்வியை சந்திக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டநீடிப்புப் பிரேரணையில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுவித்துள்ளதாக கூறுகிற போதிலும் அங்கு கெடுபிடிகள் அதிகரித்து பெரும் எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகளையும் அதிகரித்திருப்பதன் மர்மம் என்னவென்று எமக்குப் புரியவில்லை.

இப்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து பேசப்படுகிறது. 10 ஆம் திகதி தேர்தலில் எவ்வாறு, எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்துடன் தமிழ் மக்கள் உள்ளனர். ஆம்; தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்தை தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளனர்.

கிழக்கினை சிங்கள மயமாக்கி தமிழர் தாயகத்தை கூறுபோட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் சிங்களமய திட்டத்திற்கு சில தமிழ் குழுக்களும் ஒத்துழைப்பு நல்கின்றன. எனினும் இது நிரந்தரமானதல்ல, கிழக்குக்கு புலிகள் எந்த நேரத்திலும், எவ்வுருவிலும் வருவார்கள். இதனைத் தடுக்க முடியாது.

முகமாலைச் சமரில் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதனை மூடிமறைப்பதற்காக கடந்த ஒருமாதத்தில் 121 இராணுவத்தினரே கொல்லப்பட்டதாக பிரதமர் கூறினார். இது தவறான அறிக்கையாகும்.

புலிகளை இராணுவ ரீதியாக ஒரு போதுமே வெற்றி கொள்ள முடியாது. இது கடந்தகால வரலாறாகும். இராணுவத்தில் இணைந்து அரசாங்கத்தின் கபடத்தனத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாமென நாம் சிங்கள இளைஞர்களை கோருகிறோம்.

No comments: