Wednesday, 7 May 2008

கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கஜநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் செல்லல் மற்றும் 60 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக முன்னாள் வான்படை அதிகாரி நிசாந்த கஜநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்களின் போது நிசாந்த கஜநாயக்க ஒன்றிணைந்த நடவடிக்கை தலைமையகத்தில் கடமையாற்றியுள்ளார்.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வான்படையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிசாந்த கஜநாயக்க, 2006ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியும், ஜூலை 28ம் திகதியும் கறுவாத்தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து நடராஜா ஸ்கந்தராஜா என்ற தமிழ் வர்த்தகரை கடத்திச் சென்று 60 லட்ச ரூபா கப்பமாக கோரியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீர இந்திக தலுவத்த, விஜேவிக்ரம மானம்பேரிகே சம்பத் ப்ரித்வீராஜ், கே.ஏ.ஜயசிறி கொடிதுவக்கு, பிரபாபிள்ளை கந்தராசா ஆகிய நான்கு பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தகரை தடுத்து வைத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

எனினும், இந்த கடத்தல்களுக்கு பின்னணியில் அராசங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல் குழுவின் தலைவராக நிசாந்த கஜநாயக்க செயற்படுவதாகத் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிசாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

No comments: