எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இடம்பெறவிருக்கும் வன்முறைகளை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பதானது ‘ஜனநாயக விரோதச் செயல்’ எனக் கூறியிருக்கும் திஸ்ஸ அத்தநாயக்க, இந்தச் செயற்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்புவதைத் தவிர்ப்பதற்கே சபை அமர்வுகள் எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டம்தீட்டியுள்ளது. பொது வாகனங்கள் தற்பொழுது தேர்தல் பிசாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன” என்று திஸ்ஸ அத்தனாயக்க கொழும்பு ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளப்போகின்றது என்ற சந்தேகம் தோன்றியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மிகவும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு நான்கு நாட்கள் மாத்திரம் உள்ளநிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் வெற்றி கிடைக்கும் என உறுதியாகவுள்ளநிலையில், கிழக்கு வெற்றி தொடர்பாக அரசாங்கத்துக்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது” என ஹக்கீம் கூறியுள்ளார்.
இன்றுமுதல் எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதிவரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்குமென நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டிருக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment