Wednesday, 21 May 2008

ஆயுதங்கள் கைவிடப்படமாட்டாது- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(பிள்ளையான் ஒட்டுக்குளு)

விடுதலைப் புலிகளிடமிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் முற்றாக நீங்கும்வரை தமது ஆயுதங்களைக் கைவிடுவதற்கோ, முகாம்களை மூடுவதற்கோ தயாரில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தீர்மானத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எடுத்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜெ.ஜெயராஜ் கூறியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புக்காகத் தமது ஆயுதங்களையே பயன்படுத்துவதாகவும் அவை அரசாங்கத்தினுடையது அல்லவெனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கூறியிருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இல்லாமல்போகும் என அவர் கூறவில்லையெனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக ஆயுதங்களிலேயே தங்கியுள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான நவீன் என்பவர் அந்த ஆங்கில ஊடகத்துக்குக் கூறியுள்ளார். அரசாங்கத்திடமிருந்து தாம் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்ரமசிங்க கூட அவருடைய மெய்ப்பாதுகாவலர்களின் ஆயுதங்களை நம்பியே உள்ளார். நாம் விடுதலைப் புலிகளிடமிருந்து எம்மைப் பாதுகாக்கவேண்டி உள்ளது. ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது அரசியல்வாதிகள் எதிர்நோக்குவதைவிட கூடுதலான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளோம்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நவீன் என்பவர் அந்த ஊடகத்திடம் மேலும் கூறியுள்ளார்.

No comments: