Wednesday, 21 May 2008

நீதியமைச்சின் செயலாளர் யாழ் விஜயம்

நீதியமைச்சின் செயலாளர் சுகதகம்லத் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் அவர் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சரணடைந்தவர்களைச் சந்திக்கவிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதியமைச்சின் செயலாளருடைய வருகையை முன்னிட்டு யாழ் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார். யாழ் செல்லவிருக்கும் நீதியமைச்சின் செயலாளர் யாழ் சிறைச்சாலைக்குச் செல்லவிருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கான தொழிநுட்ப கல்வி வசதிகளை வழங்குவது குறித்தும் நீதியமைச்சின் செயலாளர் கலந்துரையாடல்களை நடத்துவார் என யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ஜோகராஜா கூறியுள்ளார்.

காரைநகரில் அமைக்கப்படவிருக்கும் புனர்வாழ்வு நிலையத்தையும் நீதியமைச்சின் செயலாளர் சுகதகம்லத் நேரில் சென்று பார்வையிட இருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். அபிவிருத்தித் திட்டத்தால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை கையளிக்கும் நோக்கிலேயே அவர்கள் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகத் தெரியவருகிறது.

No comments: