அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு கையடக்கத்தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதால், தொலைபேசி இணைப்புக்கள் வழங்கும்போது புதிய நடைமுறைகளைக் கையாழ்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கும், புலனாய்வுப் பிரிவின் உயர்அதிகாரிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்பொழுது தேசிய அடையாள அட்டையின் பிரதியை மாத்திரம் பெற்றுக்கொண்டு புதிய தொலைபேசி இணைப்பு அட்டைகள் வழங்கப்படுவதாக பிரதமரை மேற்கோள்காட்டி பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில்கொண்டு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கையடக்கத்தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இருக்கும் சட்டத்துக்கு அமைய குற்றச்செயல்களுக்கு கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களிடம் குறைந்தளவு 250 ரூபா தண்டப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் மாத்திரமே ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்குக் காணப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
“ஆட்பதிவுத் திணைக்கள பொது ஆணையாளருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளோம்” என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, தெஹிவளைப் பகுதியில் கையடக்கத்தொலைபேசிகளுக்கான புதிய இணைப்பு அட்டைகளை வழங்கிய தொலைத்தொடர்பு நிலையங்களில் உரிமையாளர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 30ற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment