Sunday, 18 May 2008

கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட நலனே திருமலை துறைமுகத் தாக்குதலுக்கு காரணம்: "சண்டே லீடர்"


சிறிலங்கா கடற்படைத் தளபதி, தனது தனிப்பட்ட நலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளே திருகோணமலை துறைமுகத்தில் "இன்வின்சிபிள்" விநியோகக் கப்பல் மூழ்கிப் போவதற்கு காரணம் என்று "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு:

நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் கருவிகளை (SLPA sonar system) துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்த போதும் அது நிறுவப்படாது தற்போதும் பெட்டியில் தான் உறங்கி கிடக்கின்றது.

இந்நிலையில் கடற்படை எம்வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பலை இழந்துள்ளது.

எக்ஸ்- ரைப் ('X-Type' diver detection sonar system)


sonnar system
எனப்படும் நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் சாதனம் 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்கு பெறப்பட்டிருந்தது.

இந்த சாதனம் மே 6 ஆம் நாள் சிறிலங்காவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

எனினும் அதனை விநியோகம் செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த ஒசீன்ஸ்கான் (Oceanscan, (Pvt) Ltd) நிறுவனம் அதனை நிறுவும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஸ்கொட்லாந்தில் உள்ள அபடீனைச் சேர்ந்த அந்த நிறுவனத்தை எமது நிறுவனம் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் உள்ளூர் முகவரிடம் எமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருவியானது 157,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்கள் கொடுத்து வாடகைக்குப் பெறப்பட்டதாக உள்ளூர் முகவர் சிரான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் அது ஏன் நிறுவப்படவில்லை என்பது தொடாபாக கருத்துக்களைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்த கருவிகளை கொழும்பு துறைமுகத்தில் நிறுவுவதற்கு கடற்படையினர் தடை விதித்திருந்ததாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத துறைமுக அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீருக்கு அடியிலான பாதுகாப்புக் கருவிகளை பொருத்துவதற்கு பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி தடை விதித்த கடற்படை என்ற பெயர் சிறிலங்கா கடற்படையே சாரும். உலகில் வேறு எந்த கடற்படையும் இவ்வாறு செய்ததில்லை.

கடற்படையினரின் இந்த தடையை எதிர்த்து துறைமுக காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

இதனிடையே வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து இந்த கருவிகளை கொள்வனவு செய்வதற்கான அழுத்தங்களை கடற்படையினரும், பாதுகாப்பு அமைச்சும் துறைமுக அதிகாரசபை மீது பிரயோகித்திருந்ததாகவும், அதனை துறைமுக அதிகாரசபை ஏற்க மறுத்ததனால் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள கருவிகளை நிறுவுவதற்கு கடற்படை தடை வித்துள்ளதாகவும் துறைமுக அதிகாரசபையைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் விநியோகக் கப்பல் மூழ்கிய பின்னரும் கடற்படையினர் இந்தத் தடைகளை தளர்த்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்- ரைப் கருவிகளுடன் பிரித்தானியாவின் மற்றுமொரு நிறுவனமான கியூநெற்றிக் (Qinetiq system) நிறுவனத்தின் சோனார் கருவிகளும் முன்னர் பரிசீலிக்கப்பட்ட போதும் அவை உகந்தது அல்ல என்று தொழில்நுட்ப ஆய்வுக்குழு நிராகரித்திருந்தது.

இந்தக் கருவியானது துறைமுகத்திற்கு வெளியில் செயற்திறன் அற்றதாகக் காணப்பட்டதே அதற்கான காரணம்.

எனினும் கடற்படையினர் அதனையே மீண்டும் பரிந்துரை செய்திருந்தனர். இதனைக் கொள்வனவு செய்வதற்கான பரிந்துரைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மேற்கொண்டிருந்தார்.

கடற்படைத் தளபதி துறைமுகத்தை பாதுகாப்பதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. தனது தனிப்பட்ட நலனில் தான் அதிகம் அக்கறை காட்டியுள்ளார். அதனையே மே 10 ஆம் நாள் நடைபெற்ற தாக்குதல் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த கருவிகளை கொள்வனவு செய்வதற்கு 3 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட இழுபறிகளுக்கு இடையில் விடுதலைப் புலிகள் காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்களை தாக்கியுள்ளதுடன், கொழும்பு துறைமுகத்தையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 19 ஆம் நாள் நீருக்கு அடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையினர் இரு போர்க் கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் இழந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று 13 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படையினர் நீருக்கு அடியிலான பாதுகாப்பு பொறிமுறைகள் தொடர்பாக போதுமான பாதுகாப்புக்களை கொண்டிருக்கவில்லை.

கியூநெற்றிக் சோனார் தொகுதியை கொள்வனவு செய்வதற்கான அழுத்தத்தை கடற்படைத் தளபதி ராஜபக்ச சகோதரர்களிடமும் மேற்கொண்டிருந்தார்.

மகிந்தவின் புதல்வர் ஜோசித ராஜபக்ச பிரித்தானியா கடற்படைக் கப்பலில் பயிற்சி பெறுவதனால் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நெருக்கான நிறுவனத்திடம் கொள்வனவு செய்வது நல்லது என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.

தற்போது துறைமுக அதிகார சபையின் எதிர்ப்பையும் மீறி கியூநெற்றிக் நிறுவனத்திடமிருந்து சோனார் கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: