காலகண்டன் இலங்கையில் இனப்பிரச்சினை யுத்தமாக்கப்பட்டு முப்பது ஆண்டுகளாகின்றன. 1977 ஆம் ஆண்டு நடுக்கூறில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மறைந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்தது. ஆணைப் பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியாத ஒன்றைத் தவிர சகலவற்றையும் தன்னால் செய்ய முடியும் என்ற முதலாளித்துவ பேரினவாத இறுமாப்புடன் ஜே.ஆர்.ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அறிந்து வைத்துக் கொண்டது போன்று ஜே.ஆர். அமெரிக்க விசுவாசி. `யங்கிடிக்கி'என்பது அவரது அமெரிக்க விசுவாசத்திற்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர். அத்தகைய ஜே.ஆர். தத்தெடுத்துக் கொண்ட இரட்டைக் குழந்தைகள் தான் யுத்தமும் உலகமயமாதலும் . அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நச்சுத்தனம் நிறைந்த ஆலோசனையுடன் பெற்றுக் கொண்ட இவ்விரு குழந்தைகளும் தான் கடந்த முப்பது வருட காலத்தில் யுத்த அரக்கனாகவும் பொருளாதாரப் பெரு முதலையாகவும் வளர்க்கப்பட்டு வந்தன. இதனை வளர்ப்பதில் ஜே.ஆர்., பிரேமதாசா, ரணில் போன்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களும் சந்திரிகா, மகிந்த ராஜபக்ஷ போன்ற ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதாக ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர். இவர்களது இவ்விரண்டு வளர்ப்புத்தனங்களுக்கும் பின்னால் அமெரிக்காவும் , இந்தியாவும் அவ்வவ் காலங்களில் உதவி ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளன. அதேவேளை, இலங்கையில் யார் ஆதிக்கம் செலுத்தி தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்பதில் கடும் போட்டியும் நிலவி வந்திருக்கிறது. யுத்த அரக்கனை வளர்ப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையின் முதலாளித்துவப் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு பொருளாதார இராணுவ உதவி ஒத்துழைப்புகளை தாராளமாக வழங்கி வந்ததுடன், அரசியல் ஆலோசனைகளையும் வளங்கி வந்துள்ளன. அதேவேளை, போராடும் தரப்பான தமிழர் இயக்கங்களுக்கும் அதேவிதமான உதவிகள் ஒத்துழைப்பை மறைமுகமாக ஆனால் பகிரங்க இரகசியமாக வழங்கி வந்துள்ளன. பண உதவி, ஆயுத விநியோகம் , பயிற்சி வசதிகள் யாவும் யாவருக்கும் கிடைக்கச் செய்யப்பட்டன. அமெரிக்க இந்திய மேலாதிக்க சக்திகளின் சுயரூபங்களையும் அவர்களது தூர நோக்குப் பயன்படுத்தல்களையும் சரியான அரசியல் திறன்நோக்குமூலம் உணரமுடியாத தமிழர் தரப்புகள் வெறும் உணர்ச்சி நோக்கில் அச் சக்திகளினால் பயன்படுத்தப்படும் காய்கள் ஆனார்கள். அறிந்தும் அறியாமலும் அமெரிக்க, இந்திய ஆளும் வர்க்க மேலாதிக்க சக்திகளின் வலைக்குள் வீழ்ந்த ஆளும் வர்க்கத் தரப்புகளும் தமிழர் போராட்டத் தரப்புகளும் இலங்கை வரலாறு இதுவரை காணாத மக்களுக்கான பாரிய அழிவுகளை ஏற்படுத்திவரும் வட்டத்திற்குள்ளேயே நின்று வருகின்றன. இத்தகைய அமெரிக்க, இந்தியத் தலையீடுகளும் குறுக்கீடுகளும் இன்றுவரை தொடர்கின்றன. யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாது என்ற யதார்த்தம் புரிந்து கொள்ளப்பட்ட சூழலிலும் அரசாங்கம் இந்தியாவின் இறுக்கமான அரவணைப்புடன் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்து இராணுவ வெற்றி பெற்றுவிடலாம் எனப் பகல் கனவு கண்டு வருகின்றது. அதேவேளை, கிழக்கில் இராணுவப் பின்னடைவைக் கண்ட பின்பு அதனை ஒரு வெற்றிகரமான பின்வாங்கல் மட்டுமே என்று கூறிக் கொண்டு புலிகள் இயக்கம் தம்மை தற்காப்பு நிலையில் வைத்துக் கொண்டு இன்றைய சர்வதேசச் சூழலின் போக்கின் ஊடே வெளித் தலையீடு மூலமாகத் தமது இலக்கின் ஒரு பகுதியைத் தானும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் செயலாற்றி வருகின்றது. அண்மையில் கொசோவோவில் இடம்பெற்றது போன்றதொரு நிலையை ஆவலோடு எதிர்பார்த்து அதற்குரிய காய்நகர்த்தல்களை தமிழர் தரப்பு செய்து வருகின்றதுடன், பிரசார உத்தியையும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் பிரதான கருப்பொருளாக இனப்பிரச்சினை என்பதை விட மனித உரிமை மீறல் பிரச்சினையே வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டு வருகிறது. மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த மனிதாபிமானத் தலையீடு ஐ.நா.வின் பெயரிலோ ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலிலோ இடம்பெறுவது தமிழர் தரப்பால் இருகரம் நீட்டி வரவேற்கப்படுகிறது. இத்தகைய ஒரு தலையீட்டை பௌத்த சிங்கள ஆளும் வர்க்கமும் பேரினவாத மத, சமூக அறிவுடையோரான கனவான்களும் எதிர்க்கின்றனர். அந்த பௌத்த மதப் புண்ணியவான்கள் மனித உரிமை மீறல்கள்( கொலைகள் , தரை,கடல், விமானத் தாக்குதல்) நியாயமானவை என வாதிடுகின்றனர். அண்மையில் வன்னியில் அமைந்துள்ள மடுத் தேவாலயம் யுத்தத்திற்குள் சிக்குண்ட வேளை ஜாதிக ஹெல உறுமய என்ற பௌத்த துறவிகளின் கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர் பகிரங்கமாகவே அறிக்கை விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் புனித இடங்கள், புனிதத் தேவாலயங்கள், கோவில்கள் என்று பார்க்க முடியாது. அதுவும் வடக்கில் அமைந்துள்ள கோவில்கள், தேவாலயங்கள் யாவும் பௌத்த விகாரைகளையும் இடங்களையும் அழித்துக் கட்டப்பட்டவைகளேயாகும்' என்று கூறி இருந்தார். இது ஹிட்லர் காலத்து நாஜிகள் கூடப் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள நாக்கூசிய விடயமாகும். இவ்வாறு தான் பௌத்த பேரினவாதம் பயங்கரவாதம் என்பதை அழிக்க முழுத் தமிழர்களையும் அழித்தாலும் பிரச்சினை இல்லை என்றவாறே நடந்து கொள்கிறது. இங்கே கவனிக்கக் கூடிய விடயம் யாதெனில் இன்று ஆளும் அரசாங்கத் தரப்பு தேசிய இனப் பிரச்சினை பற்றிஎதுவும் கூறாது பயங்கரவாதம் என்பதையே உயர்த்திப் பிடித்து வருகின்றது. அதனைச் சர்வதேசம் பயங்கரவாத ஒழிப்பின் ஒரு பகுதியாகக் காட்டி உள்நாட்டில் அரசியல் செல்வாக்கையும் வெளிநாடுகளில் பிச்சைப் பாத்திரத்தையும் நீட்டி வருகின்றது. அதேவேளை, தமிழர் தரப்பு தமிழீழத்திற்குப் பதிலாகத் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வு யோசனைப் பொதியை முன்வைக்கத் தயாராக இல்லாத நிலையில் மனித உரிமை மீறல் என்பதை உயர்த்தி நின்று மனிதாபிமானத் தலையீடு ஒன்று இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது. இவ்விரண்டு நிலைப்பாடுகளையும் ஆளும் தரப்பும் தமிழர் தரப்பும் கொண்டிருப்பதன் காரணமாக யுத்தம் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடி நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றால் இலங்கையின் ஏகப் பெரும்பான்மையான தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் தாங்க முடியாத துயரங்களையும் அன்றாட வாழ்க்கைச் சுமைகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இத்தனைக்குப் பின்னால் அமெரிக்க இந்திய ஆதிக்கப் போட்டியானது இருந்து வருவதைச் சிலர் மிக இலேசாக எடுத்துக் கொள்கின்றனர். அதேவேளை, வேறு சிலர் இவ்விரு சக்திகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்து செயற்படுவதன் மூலம் தத்தமது நோக்கங்களை அடையலாம் என்றே நம்புகின்றனர். இலங்கையின் ஆளும் தரப்பினர் மேற்குலகு மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்து வருகின்றனர். பொருளாதார உதவிகள் கிடைக்க வேண்டுமென உள்ளூர விரும்பும் அவர்கள் மேற்குலகும் அமெரிக்காவும்தம்மை அழுத்தி ஆட்டிப்படைக்க நிற்பதாகவே கருதுகின்றனர். அவ்வாறே அமெரிக்க மேற்குலக சக்திகள் ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலும் தம்மீது வைத்திருக்கக் கூடிய அதி விசுவாசமும் நம்பிக்கையும் ராஜபக்ஷவின் ஐ.சு.ம. முன்னணி அரசாங்கத்திடம் இல்லை என நம்புகின்றனர். இலங்கையின் பூகோள அமைவிடம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம். ஆழ் சமுத்திரச் சூழல், முழுத் தென் ஆசிய மத்திய ஆசியப் பிராந்தியத்தினையும் கையாண்டு கட்டுப்படுத்தவல்ல ஒரு நாடு என்பது அமெரிக்க மேற்குலக இராணுவ பொருளாதார மூலோபாய கொள்கை வகுப்பாளர்கள் முன் உணர்ந்து கொண்ட விடயமாகும். இவற்றின் காரணமாகவே அமெரிக்கா இலங்கை மீதான தனது கண்களையும் கைகளையும் சும்மா வைத்திருக்க விரும்பவில்லை. இதனைத் தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாகிவரும் இந்தியா தனது பெரியண்ணன் பாத்திரத்தை இலங்கை மீது பயன்படுத்தி வருகின்றது. இது இன்று நேற்று அல்ல. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்குமுன்னமே இப்பிராந்தியத்தில் இந்தியா எவ்வாறு தன்னை ஒரு அகன்ற பாரதமாகவும் ஆதிக்க இந்தியாவாகவும் வளர்த்து வருவதை ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியத் தலைவர்களும் அவர்களது கொள்கை வகுப்பாளர்களும் திட்டமிட்டுக் கொண்டனர். இவற்றின் வெளிப்பாடுகள் காலத்திற்குக் காலம் வெளிப்பட்டு வந்திருக்கிறது. இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளும் ஆளும் தரப்புகளும் பழைய வரலாற்றுக் கசப்புணர்வுகளால் இந்திய விரோதக் கண்ணோட்டத்துடன் இருந்தாலும் இறுதி முடிவுகளுக்கு வரும்போது இந்திய ஆளும் வர்க்கத்தை எளிதில் புறந்தள்ளவோ நிராகரிக்க முடியாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். முன்பு மட்டுமன்றி இன்றும் இதுதான் நிலைமை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் ஆசிய நாடுகளை மையப்படுத்திய பயணமே தனது ஆட்சிப் பயணம் என்பதையும் தென்னாசிய நாடுகள் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அனுசரணை வழங்க வேண்டும் என்றும் கூறியமை தற்செயலானவை அல்ல. குறிப்பாக இந்தியத் தலைமை சக்திகளை அரவணைத்து தமது காரியங்களை செய்து கொள்வதையும் மகிந்த சிந்தனை வற்புறுத்திக் கொண்டது. அவர்களது பொருளாதார நலன்களை இலங்கையில் வேண்டியளவுக்கு விஸ்தரிப்பதற்கு இடமளித்த அதேவேளை, இராணுவ உதவிகள் ஒத்துழைப்புக்களைத் தாராளமாகப் பெற்றுக் கொண்டும் வருகிறது. அண்மையில் இந்தியா ஆயிரத்து நூறு கோடி இலங்கை ரூபாவில் யுத்தத்திற்காக உதவி இருக்கிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது. இச்செய்தி வெளிவந்து நான்கு நாட்களாகியும் சில இந்திய ஆளும் வர்க்க விசுவாசிகள் விரும்புவது போன்று எவ்வித மறுப்பும் டெல்லியின் ஆட்சி அதிகார மட்டத்திலிருந்து வெளிவரவில்லை. இலங்கையின் தமிழ்த் தரப்பு எப்போதும் இந்திய ஆளும்வர்க்க விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்து வந்துள்ளனர். 1987 இல் இடம்பெற்ற அமைதிப்படைக்காலகட்ட பட்டறிவுகளுக்குப் பின்பு கூட இன்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள். அன்று கடற்பரப்புகளுக்கு அப்பால் வடக்கே கைநீட்டி வரவேற்ற அதே கரங்கள் இன்று மேற்கே கைகளை நீட்டி அமெரிக்க - ஐரோப்பியர்களைத் தலையீடு செய்ய வருமாறு வேண்டி நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும். அதேவேளை, ஆளும் தரப்பானது எந்தளவுக்கு இந்தியாவைக் குளிர்வித்து தனது இராணுவ நடவடிக்கைக்கும் யுத்தத்திற்கும் வலுச் சேர்க்க முடியுமோ அந்தளவு உச்சத்திற்குச் சென்று நிற்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடு அண்மைய இந்தியாவின் யுத்தநிதி உதவி என்றால் அதற்குப் பிரதி உபகாரமாகவோ என்னவோ இலங்கையின் பாராளுமன்ற வளாகத்தில் 1987-1991 கால கட்டத்தில் இந்திய அமைதிப்படையில் வந்து வடக்கு, கிழக்கில் உயிர்துறந்த 1500 படையினருக்கான நினைவுச் சின்னம் அமைத்தல் இடம்பெறுகின்றது. இவ்வாறு இலங்கையின் தமிழர் தரப்பிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்குமான இடைவெளி அதிகரித்துக் காணப்படும் அதேவேளை, இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையிலான நெருக்கம் அதிகரித்து வருகின்றது. மறுபுறத்தில் இலங்கை அரசுக்கும் அமெரிக்க - ஐரோப்பிய சக்திகளுக்குமிடையேயிலான இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி தமிழர் தரப்பு தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்க ஐரோப்பிய சக்திகளுடன் இணங்கியும் நெருங்கியும் செயல்படும் வழிமுறைகளை முன்னெடுத்தும் வருகின்றது. இவற்றை எல்லாம் ஊன்றி அவதானித்து நோக்கும்போது இலங்கையின் இனப்பிரச்சினையை மையமாக வைத்து இந்திய அமெரிக்க ஆதிக்கப் போட்டியானது திரைமறைவில் இடம்பெற்றுவருவதைக் காண முடிகிறது. இதன் மூலம் ஒரு விடயம் மட்டும் உண்மையாகத் துலக்கம் பெறுகின்றது. பயங்கரவாதம் என்பதையும் மனித உரிமை மீறல் என்பதையும் அரசாங்க - தமிழர் தரப்புகள் கையில் எடுத்து நிற்பதானது முழு இலங்கையையும் அனைத்துத் தேசிய இனங்களையும் நாசங்களுக்குள்ளும் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சீரழிவுகள், அழிவுகள் கொண்ட பாலைவனத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி நிற்கின்றன என்பதேயாகும்.
Saturday, 3 May 2008
இலங்கையின் இனப்பிரச்சினையை வைத்து ஆதிக்கப்போட்டியில் குதித்துள்ள அமெரிக்கா, இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment