Saturday, 3 May 2008

ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்- லூயிஸ் ஆர்பர்

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைய பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர்களின் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.

“ஊடக சுதந்திரத்தையும், தகவல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நலிவுறச்செய்யும் வகையில் பல அரசாங்கங்கள் செயற்பட்டுவருகின்றன. உலகத்தில் இடம்பெறும் அரசியல், நிகழ்வுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு” என ஆர்பர் கூறியுள்ளார்.

ஊடகச்செயற்பாட்டை நலிவுறச்செய்யும் முயற்சிகள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் படுகொலைகள் போன்றவற்றுக்கு முகம்கொடுக்கவேண்டி உள்ளது. எனினும், அவர்களைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான தகவல்களை மறைக்கும் நோக்கில் ஊடகங்களுக்கு எதிராக பிழையான பிரசாரங்களை அரசாங்கங்கள் முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் லூயிஸ் ஆர்பர், ஒரு சம்பவம் தொடர்பான பிரச்சினை எழும்போது அதனை பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி அரசாங்கம் கேள்விகளை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.

No comments: