Tuesday, 13 May 2008

மெதமுலன சண்டியர்களின் கிழக்கு தேர்தல்

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிhக்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். காட்டு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர் நடத்திய முதலாவது தேர்தலில் காட்டுச் சட்டம் அமுல்ப்படுத்தபபட்டது. கிழக்கு மாகாண சபை தேர்தலை மெதமுலன சண்டியர்களின் தேர்தலாக மேற்கொண்டு, மெதமுலன சிந்தனையை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தயாசிறி ஜயசேகர குற்றம்சுமத்தினார்.

வாக்கு மோசடி, தாக்குதல், அச்சுறுத்தல் ஆகியன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. சில வாக்கு சாவடிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பிள்ளையான் குழுவினால் விரட்டப்பட்டது, மாத்திரமல்ல சிலரை பலவந்தமாக அவர்களது முகாம்களுக்கு இழுத்துச் சென்று, வயர்களினால் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அவர்களை தேர்தல் முடியும் வரை முகாம்களிலேயே தடுத்து வைத்திருந்ததாகவும் தயாசிறி கூறினார். தேர்தல் மோசடிகள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை காவல்துறையினர் பதிவுசெய்யவில்லை.


முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டாம் என அக்கரைபற்று பிரதேச பிரதிகாவல்துறை மா அதிபர் உத்தரவிட்டிருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்க அமைச்சர்கள் ஒரு லட்சத்து 83ஆயிரம் ரூபாவுக்கு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த அமைச்சர்கள் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் தினத்திற்கு முன்னர் அம்பாறையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது எனவும் இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்தது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை பிலிபைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து தேர்தலை கண்காணிக்க சென்றவர்களுக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை. 15 வாக்கு சாவடிகளுக்கு சென்று விட்டு, தேர்தல் நியாயமாக நடந்தது என எவ்வாறு கூறமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அவருக்கு தேவையான வெளிநாட்டினரை அழைத்து வந்து, அறிக்கை வெளியிட வைத்துள்ளார். இவ்வாறானவர்களை வெளிநாட்டில் இருந்து தேர்தல் கண்காணிப்புக்கா அழைத்து வந்த நிலையில் எதிர்காலத்தில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைத்து வர முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: