Monday, 5 May 2008

அமைச்சர், அரசதரப்பு ஆயுத வர்த்தகரை கொலை செய்ய கிளிநொச்சியிலிருந்து உத்தரவு

அரசாங்கத்தில் யுத்த நடவடிக்கை சம்பந்தமாகத் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அமைச்சர் ஒருவரையும் பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய ஆயுத வர்த்தக முகவர் ஒருவரையும் கொலை செய்யும்படி கிளிநொச்சியிலிருந்து புலிகள் இயக்கத் தலைவர் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்தும் குழுவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிலியந்தலை பஸ் குண்டுத்தாக்குதல் தொடர்பாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புலனாய்வு உத்தியோகத்தர்களால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளே மேற்படி தகவல்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவரால் அனுப்பப்பட்ட மேற்படி பயங்கரவாதிகள், குறித்த பிரபல அமைச்சரைக் குண்டு வைத்துக் கொலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் இதனால் குறித்த முக்கிய ஆயுதவர்த்தகரைக் கொலை செய்யும்படி பின்னரும் கிளிநொச்சியிலிருந்து உத்தரவு வழங்கப்பட்டதாகவும் மேலும் மேற்படி சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளைப் பிரதேசத்தில் வசிக்கும் அந்த ஆயுத வர்த்தகரைச் சந்திக்க சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் அடிக்கடி அங்கு வருவதாகவும் அவ்வாறு வந்திருக்கும் சந்தர்ப்பம் பார்த்து அவர்கள் இருவரையும் கொல்லுவதற்கு மேற்படி புலிகள் இயக்க பயங்கரவாதக் குழுவினர் திட்டமிட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக கிளிநொச்சியிலிருந்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப பயங்கரவாதிகள் மேற்படி சிரேஷ்ட இராணுவ அதிகாரியும் ஆயுத வர்த்தகரும் பயணம் செய்யும் வாகனத்துக்கு குண்டு வைக்க முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அது பலிக்காமல் போகவே பயங்கரவாதிகள் எடுத்துவந்த குண்டை குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மஹரகம, பிலியந்தல, கெஸ்பாவ,தெஹிவளை அல்லது கல்கிசைப் பகுதிகளில் பஸ் ஒன்றில் வைத்து விட்டு செல்லும்படி தொடர்ந்து கிளிநொச்சியிலிருந்து கட்டளையிடப்பட்டதாகவும் அதற்கேற்ப பயங்கரவாதிகள் பிலியந்தலையில் பஸ்ஸில் வைத்ததாகவும் மேலும் மேற்படி சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இந்த பிலியந்தலை பஸ் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இரண்டு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவி வழங்கிய ஒரு சிங்கள நபரையும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திவயின: 01.05.2008

No comments: