Monday, 5 May 2008

இணைந்த வடகிழக்கும், பிரிந்த வடகிழக்கும் தீர்வல்ல! - ரவூப் ஹக்கீம்

”இணைந்த வடகிழக்கும் தீர்வல்ல. பிரிந்த கிழக்கும் தீர்வல்ல. இதற்கிடையில்தான் தீர்வு இருக்கின்றது என்பதை நாங்கள் மிகத்தெளிவாகச் சொன்னோம். அதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலே நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று சொல்லுகின்ற ஒரேயொரு விசயம் மிக நேர்மையாக ஒரு தீர்வைக் கொண்டுவர வேண்டும்.

அந்தத் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுத் தரும். ஒரே சமாந்திரமாக இந்தப் பாரம்பரிய பூமியிலே வாழுகின்ற உரிமையை நாங்கள் நிலைநாட்டுவோம் என்பதை நாங்கள் அவர்களுக்குக் காட்டப் போகின்றோம்” எனக் கூறினார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

”வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்துவிட்டால் முஸ்லிம்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்று முன்பு பேசிய அமைச்சர்கள் இன்று வக்கில்லாமல் வெற்றிலேயிலே சங்கமமாகி தங்களுடைய ஊர்களிலேயே வேட்பாளர்களைப் போட முடியாமல் இன்று தள்ளாடிப் போயிருக்கின்றார்கள்.

ரவூப் ஹக்கீமால் தான் கட்சியில் ஒற்றுமைப்பட முடியாமலிருப்பதாக சொல்லித் திரிகின்றனர். ஆனால், போனவர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்களா? அங்கேயும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கூட்டம். கல்லெறிந்தால் கட்சித் தலைவரின் தலையில் தான் போய்விழும்.

முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ளாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளைப் பெறமுடியாது என்பது அரசுக்குத் தெரியும்.

இருக்கின்ற அமைச்சர்களெல்லாம் வெறும் பதவிக்காக போனவர்கள். முஸ்லிம் காங்கிரஸ் நம்பகத்தன்மையுள்ள ஒரு இயக்கம் என்பதில் நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். மக்களுடைய பிரச்சினைகளை முன்வைத்துத்தான் நாங்கள் அரசிலிருந்த விலகினோம்.

சிலைகளைக் கொண்டு வந்து எல்லைக் கற்களாக வைப்பதன் மூலம் எங்களது சமூகத்தை மிக மோசமாக எங்களுடைய பூமியிலேயே சிதைக்கின்றபோது உங்களுக்கு காவடி எடுக்க முடியாது என அரசுக்கு மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஆட்களைப் பறித்தெடுத்து வாக்கெடுக்க முடியாது. அதிகாரத்திற்கான போட்டியில் அநியாயத்திற்கு எங்களால் துணைபோக முடியாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.”

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தோப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார். இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம் குறிப்பிட்டதாவது:

”அநியாயமான அரசுக்கு உடந்தையாக இருந்து அவர்களுடைய அக்கிரமத்தின் பங்காளியாக இருந்த தமிழ் பேசும் சமூகங்கள் அவதிப்படுகின்றபோது அல்லல்படுகின்றபோது அதிலே குளிர்காய்கின்ற வெறும் குள்ளநரிக் கும்பலாக முஸ்லிம்களை மாற்றி விடக்கூடாது என்கின்ற நேர்மையான அரசியல் பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கின்றது. அதன் பிரதிபலிப்புத்தான் இந்தத் தேர்தலும் எமது முடிவுமாகும்.

இன்றிருக்கின்ற காலகட்டம் இந்த நாட்டின் அரசியலிலே இதற்கு முன்பு சிறுபான்மை சமூகங்கள் எதுவுமே சந்திக்காத மாபெரும் சவால்களை சந்திக்கின்ற ஒரு காலகட்டம். இன்று நடக்கின்ற அரசியல் இதற்கு முன்பு மோசமாக ஆட்சி செய்த அரசுகளை விடவும் படுமோசமான திக்குகளிலே போகின்ற ஒரு ஆட்சி என்பதை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்.

நான் பல அரசுகளிலே அமைச்சராக இருந்திருக்கின்றேன். என்னுடைய 14 வருடகால பாராளுமன்ற அரசியலில் ஒரு அமைச்சுப் பதவியிலும் முழுமையாக 6 வருட காலம் இருந்த அனுபவம் எனக்குக் கிடையாது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு அமைச்சுப் பதவிகளிலேயே ஆறுதலாக இருந்து அதன் அந்தஸ்தை அனுபவிப்பதற்கு முடியாது. சுமூகத்தினுடைய உரிமைகள் சம்பந்தமாக அந்த அமைச்சரவைக்குள்ளே இருந்து போராட வேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் தோள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று அமைச்சரவையிலே இருக்கின்ற சோரம் போனவர்களும் இந்த அரசுக்கு காவடி எடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்துவிட்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பதவிகளைத் துறந்து போட்டியிடும் நிகழ்வுகள் யாவும் வற்புறுத்திச் செய்த விசயமல்ல. கட்சியின் எந்தவொரு உறுப்பினரதும் வேண்டுகோளின் பேரில் தலைமை செய்த விசயமல்ல.

எல்லாம் இறைவனின் நாட்டத்தின் பேரில் நான் தனிப்பட எடுத்த தீர்மானதடதிற்கு கட்சியின் உயர் பீடம் அங்கீகாரம் தந்ததே தவிர முடிவை எடுக்கவில்லை. ஏனெனில், மக்களுக்காக, சமூகத்திற்காக வகிக்கின்ற இந்த அந்தஸ்து மக்களுக்காகவே, சமூகத்திற்காகவே பாவிக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

No comments: