Monday, 19 May 2008

பூமிக்கு அருகே சனி கிரகம் : நள்ளிரவில் பரபரப்பு

நிலா அருகே, பச்சை நிற கோளம் தோன்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது சனி கிரகமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.வானத்தில் நிலா அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.33 மணிக்கு பச்சை நிறத்தில் ஒரு கோளம் உதித்தது. 1 மணி நேரம் கழித்து இந்த கோளம் மறைந்தது. சாதாரண கண்களுக்கு இது மங்கலாக தெரிந்தது. தொலை தூரத்தை படம் எடுக்கும் சக்தி வாய்ந்த லென்ஸ் கேமராக்களின் வழியாக இந்த கோளத்தை தெளிவாக பார்க்க முடிந்தது.


இது குறித்து கோவை அரசு கலை கல்லூரி புவியியல் துறை பேராசிரியர் நாகரத்தினம் கூறியதாவது:


ஆயிரம் ஆண்டுகளுக்கொரு முறை: சூரியனை சுற்றி நீள் வட்டப்பாதையில் ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. இவை சரியான வேகத்தில் சரியான நேரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றி வருகின்றன. இது தவிர, மேலும் இரண்டு கோள்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு கோள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சூரியனை சுற்றி வரும் கோள்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கொரு முறை பூமியை நோக்கி நெருங்கி வருவதற்கோ அல்லது விலகிப்போவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.


மற்ற கோள்கள் அனைத்தும் சரியான வேகத்தில் சரியான நேரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சூரியனை சுற்றி வரும். ஆனால், பூமிக்கு மிக அருகாமையில் உள்ள சனி, இதற்கு அடுத்து உள்ள செவ்வாய் ஆகிய கிரகங்கள் நெருங்கியும் வரும்; விலகியும் போகும். இவை தவிர, மற்ற கிரகங்கள் பூமிக்கு அருகே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.


பூமியில் இருந்து பார்த்ததால், நிலா அருகாமையில் பச்சை நிற கோளமாக தெரிந்தது. பச்சை நிறமாக இருந்ததால் அது சனி கிரகம் தான். சனி கிரகம் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் மட்டுமே தெரியும். செவ்வாய் கிரகம் சிகப்பு கோளமாக காணப்படும். அதனால், நேற்று நிலா அருகே தெரிந்தது சனி கிரகம். இதனால், பூமிக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது.


இவ்வாறு பேராசிரியர் நாகரத்தினம் கூறினார்.

No comments: