Saturday, 10 May 2008

கிழக்குத் தேர்தல்கள் ஓர் அரச வன்முறையாகும் - கபே அமைப்பு

இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் சட்டம் ஒழுங்கிற்கு பதிலாக அரச வன்முறைகள் மேலோங்கிக் காணப்பட்டதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு (கபே) தெரிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 அளவில் சுமார் 175 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக்கூடும் எனவும், வாக்காளர்களை தாக்குதல் தொடர்பான 26 சம்பவங்களும், 35 அச்சுறுத்தல் சம்பவங்களும், வாக்களிப்பு மையங்களுக்கு செல்லவிடாது தடுக்கப்பட்ட 61 சம்பவங்களும், 16 கள்ள வாக்களித்தல் சம்பவங்களும், வேறும் 31 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதிகமான முறைப்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 முறைப்பாடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 58 முறைப்பாடுகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 34 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

சுதந்திரமானதும், நியாயமானதுமான வாக்களிப்பிற்கு பதிலாக 13-15 வரையான சிறுவர் சிறுமியரை அழைத்து வந்து கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


திருகோணமலை மாவட்டத்தின் சில வாக்களிப்பு மையங்களில் புத்தளத்தைச் சேர்ந்தோர் வாக்களித்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

No comments: