இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி போன்றவற்றின் கலவையொன்றை தீர்வாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ வித்தாரணவும் மேலும் சிலரும் வடஅயர்லாந்துக்குச் சென்று அங்கு கடைப்பிடிக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வு முறைகளை இங்கும் முன்வைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
“அயர்லாந்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்ப்பதற்கு உதவும் என்பதில் அடிப்படை இல்லை. அங்கு புரட்டஸ்தாந்தவர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையிலேயே பிரச்சினை காணப்பட்டது” என ஹேரத் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்வு முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களை விளிப்புணர்வூட்டும் திட்டங்களை நாடளாவியரீதியில் முன்னெடுப்பதற்கு அரசியல் குழு தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொருள்களின் விலை அதிகரிப்பானது நாட்டு மக்களை பாரிய சிக்கலுக்குள் தள்ளியிருப்பதாக அவர் கூறியுள்ளார். உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி மாத்திரம் அரிசித் தட்டுப்பாட்டுக்குக் காரணமில்லை. உற்பத்திப் பொருள்களை அரசாங்கம் உரிய முறையில் களஞ்சியப்படுத்தி, விநியோகிகாமையே முக்கிய காரணமெனவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment