Tuesday, 20 May 2008

கிழக்கில் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிப்பு: "த பொட்டம்லைன்"

கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அங்கு தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தாக்குதலாக ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தள-கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள 38 ஆவது மைல் கல்லடியில் நடைபெற்ற இத்தாக்குதலில் அங்கு காவல் கடமையில் இருந்த சுமித் சஞ்சீவ (வயது 26) என்ற ஊர்காவல் படையைச் சேர்ந்தவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

புத்தள காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர், படுகாயமடைந்த நிலையில் புத்தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காது இறந்து விட்டார்.

மற்றுமொரு சம்பவத்தில் காவல்துறை உறுப்பினர் ஒருவரும் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதனிடையே அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு சிறப்பு அதிரடிப்டை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

முகாமின் பிரதான வாயிலில் கடமையில் இருந்த போது, றுவின்குளம் காட்டுப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளால் குறிசூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர், அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: