Wednesday, 7 May 2008

இலங்கையில் ஜனநாயகத்தின் கதவுகளும் முடப்பட்டுள்ளன: எதிர்க்கட்சித் தலைவர்:

இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது பாராளுமன்றம் மட்டுமல்ல இலங்கையின் ஜனநாயகத்தின் கதவுகளும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் காணப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விவாதத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இன்று 10.30 அளவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற வேளையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இன்றைய தினம் அது மூடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள்; தெரிவித்துள்ளனர். யாரால் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளதென ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அதிகாரிகளிடம் வினவியதோடு, பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாகவோ, அல்லது பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளமை தொடர்பாகவோ இதுவரையில் எவரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற கட்டிடத்தின் கீழ் மாடிக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: