Friday, 16 May 2008

கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் பிள்ளையான்- ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கிறார்

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் யார் என நிலவிவந்த தொடர்ச்சியான கேள்விக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகப் பதவிப்பிரமானம் செய்யவுள்ளார்.

முதலமைச்சர் உட்பட ஆளும் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

ககுpழக்கு மாகாணசபையில் கூடுதல் பிரதிநிதிகளைப் பெறுபவர்களுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென அரசாங்கம் முன்னர் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பிரதிநிதிகளைவிட, முஸ்லிம் பிரதிநிதிகளே கூடுதல் ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய ஹிஸ்புல்லாவுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்ததுடன், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதற்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை லண்டனிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், இரவு அலரிமாளிகையில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

நேற்றைய சந்திப்பின் பின்னணியிலேயே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு வைபவம் இடம்பெறுகிறது.

பதவியேற்பு வைபவம் 4 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு மிகவும் அண்மையில் நண்பகல் 12.05 மணியளவில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: