Sunday, 11 May 2008

தேசிய - மாகாண ரீதியில் காவல்துறை சேவை பிரிக்கப்படவுள்ளது?

மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கும் அடிப்படையில் மாகாணகாவல்துறை ஆணைக்குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள காவல்துறை சேவை மாகாண மற்றும் தேசிய ரீதியாக பிரிக்கப்படவுள்ளன. 13வது அரசியலமைப்பின் மூலம் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் 8 மாகாணங்களுக்கு புதிய காவல்துறை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளதுடன் இந்த ஆணைக்குழுவில் மாகாண பிரதி காவல்துறை மா அதிபர், அரசசேவை ஆணைக்குழுவின் பிரதிநிதி, மற்றும் மாகாண முதலவர் பரிந்துரைக்கும் ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைக்குட்பட்ட சட்டதிட்டங்களை அமுல்படுத்தும் பொறுப்பு மாகாண காவல்துறை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும், தேசிய காவல்துறை, தேசிய பாதுகாப்புக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் குண்டு வெடிப்புகள், முக்கிய நபர்களின் கொலை தொடர்பான பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமான விடயங்களை கையாளும்.

விசேட அதிரடிப்படை, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு என்பன தேசிய காவல்துறையின் கீழ் இயங்கும் என கூறப்படுகிறது. எனினும் மாகாண சபைக்கு சென்று தேசிய காவல்துறை விசாரணைகளை மேற்கொள்ளுமாயின், அந்த விசாரணைகளில் நேரடியாக தலையிடும் அதிகாரம் மாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பபை தொடர்ந்து காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் கிழக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களுக்கு வழங்கப்படும் எனவும் அரச தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, 13வது அரசியலமைப்பு திருத்தின்படி அதிகாரங்களை வழங்குமாறு மாகாண முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படலாம் என குறிப்பிட்டார்.

No comments: