Saturday, 17 May 2008

கிழக்கு மாகாணசபை: விவகாரத்து பேச்சுகளோடு தொடங்கும் திருமணம்

மப்றூக்

ஆரூடங்கள், ஜோசியங்கள், அனுமானங்கள் என அனைத்தையும் அடித்து ஒருபுறம் கிடப்பில் போட்டுவிட்டு அதிரடியாக வந்திருக்கிறது கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள்! வெற்றிலைச் சின்னத்தின் வெற்றியென்பது ஏற்கனவே நம்மால் எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான். ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி, ஹிஸ்புல்லாவைப் பின்தள்ளி விட்டு அவரை விடவும் அதிகமாக வேறொரு முஸ்லிம் வேட்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை மற்றும் பத்து ஆசனங்களை பெறுவோம் எனச் சவால் விடுத்திருந்த பிள்ளையான் அணியினர் ஆறே ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்றமை என்று கிடைக்கப்பெற்ற முடிவுகளில் ஏறத்தாழ எல்லாமே "தடாலடி'கள் தான்!

ஜனாதிபதி மற்றும் முப்பதுக்கும் அதிகமான அமைச்சர்கள் களத்தில் நின்று காரியம் பார்த்த தேர்தல் இது! அபேட்சகர்களை விடவும் அமைச்சர்களே இத்தேர்தலில் அதிகம் வேலை செய்திருக்கிறார்கள். காரணம், என்ன விலை கொடுத்தாவது கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டுமெனும் மேலிடத்தின் கடுமையான உத்தரவாகும்!

மிக மோசமான வன்முறைகள் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்தலில் அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை. அதேசமயம் மக்களும் பெரிதாக தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தமது வீரப்பிரதாபங்களைக் காட்டுவதற்கென்றே வாக்களிப்பு நிலையங்களுள்ள பகுதிகளில் கூட்டமாக நின்று சத்தமிட்டுக் கொண்டிருக்கும் அதிதீவிர தொண்டர்களும் இம்முறை மிஸ்ஸிங்!

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை அது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மு.காங்கிரசுக்கு வாய்ப்பான பிரதேசமாகும். குறிப்பாக, பொத்துவில் தொகுதியென்பது ஐ.தே.க.வின் கோட்டையாகும். ஆனால், இம்முறை கோட்டையும் மாவட்டமும் ஐ.ம.சு. முன்னணியிடம் வீழ்ந்து போயிற்று! இந்த வீழ்ச்சிக்கான காரணங்களில் ஐ.தே.க. கூட்டு முன்னணியில் போட்டியிட்ட அபேட்சகர்களின் பலவீனமும் ஒன்றாகும். வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் மிக நன்றாகத் திட்டமிட்டு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதேவேளை, மு.கா. கூட்டணி அபேட்சகர்களில் பலர், தனித்தனியாகப் பிரிந்து தமது "மூப்புக்கு' விரும்பியவாறு நடந்து கொண்டனர்! குறிப்பாக தனிப்பட்ட வாக்குகளை எப்படித் திரட்டிக்கொள்வது என்பதிலேயே இந்த மு.கா. வேட்பாளர்கள் கவனம் செலுத்தினர். சில மு.கா. வேட்பாளர்கள் தமது சக வேட்பாளர்களின் இலக்கங்களுக்கே வாக்களிக்க வேண்டாமென்று உட்பிரசாரங்களில் ஈடுபட்ட செய்தியும் நமது காதுகளுக்கு வந்து சேர்ந்தது!

அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் அதாஉல்லாவின் அணியிலிருந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட மூவரும் வெற்றிபெற்றுள்ளனர். அமைச்சர் அதாஉல்லா உறுதியளித்தது போல் அவரின் அக்கரைப்பற்றுப் பிரதேசம் இம்முறை கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்துக்கு வழங்கியிருக்கிறது. அதேவேளை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் போட்டியிட்ட அதாஉல்லாவின் வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளையும் அக்கரைப்பற்றார்கள் வழங்கி வைத்திருக்கின்றனர். மேலும், அக்கரைப்பற்றுப் பிரதேசம் தொடர்பில் நிலவிவந்த பல்வேறு சந்தேகங்களுக்கும் அவ்வூர் மக்கள் இந்தத் தேர்தல் மூலமாக விடையளித்திருக்கின்றார்கள். அதேவேளை, எதிர்காலத்திலும் அதாஉல்லாவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிலைத்திருக்க வேண்டும் என்கின்ற சேதியினையும் இதன்மூலம் அவர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்! எனவே, இனிவரும் பொதுத் தேர்தல்களின் போது, அதாஉல்லாவின் வெற்றிக்கு அக்கரைப்பற்றை விடவும் மேற்படி மூன்று ஊரவர்களும் கடுமையாக உழைக்க வேண்டிய கடப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். உண்மையாகச் சொன்னால், கிழக்குத் தேர்தலில் அதி உச்சபட்ட நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களில் அமைச்சர் அதாஉல்லாவும் ஒருவராவார்!

பல்வேறு தரப்புகளினதும் ஆருடங்கள் இத்தேர்தலில் புஸ்வானமாகப் போயிருந்தாலும் நமது சில அனுமானங்கள் பலித்திருக்கின்றன. அவைகள்:

*அரசு இத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறும்.

*எல்லா வேட்பாளர்களையும் விட, மு.கா. செயலாளர் ஹசன் அலி அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார்.

*அக்கரைப்பற்று மற்றும் காத்தான்குடி பிரதேசங்கள், அம்பாறையில் தமிழர் தரப்பு வாக்குகள் போன்றவை தேர்தல் முடிவில் ஆதிக்கம் செலுத்தும்.

*திருகோணமலையில் ஜே.வி.பி. ஆசனமொன்றைக் கைப்பற்றும்.

*மு.கா. கூட்டணி திருகோணமலையில் வெற்றியீட்டும்.

என்பன போன்ற நமது எதிர்வுகூறல்கள் பலித்துள்ள அதேவேளை, சில அனுமானங்களுக்கு முற்றிலும் மாற்றமான முடிவுகளும் கிடைத்திருக்கின்றன.

இதேவேளை, கிழக்குக்கான முதலமைச்சர் பதவி தொடர்பில் தேர்தல் முடியும் வரை, நழுவலான பதில்களையே கூறிவந்த அரசாங்கத்தின் கழுத்து பின்னர் இறுக ஆரம்பித்தது. பிள்ளையானுக்கும் தான், ஹிஸ்புல்லாவுக்கும் தான் அல்லது அதிக ஆசனம் பெறும் தரப்பினருக்கு அந்தப்பதவி வழங்கப்படும் என்று எவரையும் பகைத்துக் கொள்ளாமல் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் சென்று தேர்தலை முடித்துவிட்டு, பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து இருந்த அரசாங்கத்தரப்புக்கு முதலமைச்சர் பதவி என்கின்ற விடயம் பெரும் தலையிடியாக மாறியது.

கிழக்கின் முதலமைச்சர் பதவி தனது தரப்புக்கே வழங்கப்பட வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கின்றார் பிள்ளையான்! ஆனால், பிள்ளையான் அல்லது தமிழர் தரப்பை விடவும் அதிக ஆசனங்களை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம்கள் பெற்றிருக்கின்றார்கள். எனவே, முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று "வெட்டொன்று துண்டு இரண்டு' பாணியில் கூறி அறிக்கை விட்டிருக்கின்றனர் 12 முஸ்லிம் அமைச்சர்கள்! தமது முடிவுக்கு மாற்றமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் தங்களுடைய அமைச்சுகளை துறந்துவிடப்போவதாக வேறு, குறித்த 12 முஸ்லிம் அமைச்சர்களும் அரசாங்கத்தை வேறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு என்றாலே, எப்படியாவது பிரச்சினைகள் வந்து சேர்ந்துதான் விடுகின்றன!

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியினைக் கொடுப்பதன் மூலமாக அரசாங்கம் சர்வதேசத்தினை குறிப்பாக இந்தியாவைத் திருப்திப்படுத்த முடியுமாக இருக்கும். தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஈழப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது கொடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களை, இதன்மூலம் ஓரளவாயினும் சமாளிக்க முடியும். ""இலங்கையில் தமிழர் தரப்பிடம் கிழக்கின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டு விட்டதாக' கூறப்படும் செய்திகளில் தமிழகமும் ஆறுதல் கொள்ளலாம்! அதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கு இந்த முதலமைச்சர் பதவியினைக் கொடுத்தால், அது அரசாங்கத்துக்கு உள்ளூர் ரீதியில் பல சாதகங்களை வழங்கும். சற்றே விளக்கமாகச் சொன்னால், மகிந்த அரசு ஒரு பெரும் சரிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதாவது, முஸ்லிம் மக்களின் பெருமளவான வாக்குகளை இழக்கும் நிலையையும், அரசுக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்களில் அதிகமானோர் செயற்படக்கூடிய நிலையொன்றையும் இல்லாது செய்துவிட முடியும்.இதற்கிடையில், கிழக்கு மாகாணசபைக்கு தெரிவானோரின் பதவியேற்பு வைபவமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது!

கிழக்குத் தேர்தல் மோசடிகளால் நிறைந்ததொன்று என ஐ.தே.க.வும், மு.காங்கிரசும் கூட்டாக அறிக்கை விட்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கைகளால் ஆகப்போவது எதுவுமேயில்லை என்பது அறிக்கை விட்டோருக்கே தெரியும். கிழக்குத் தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த பத்திரிகைச் செய்தியைப் படித்துவிட்டு நண்பரொருவர் அடித்த கொமன்ஸ் சுவாரசியமானது. ""அமைச்சர்கள் அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்த தேர்தலில் ""அப்படி இப்படி' ஆகத்தான் செய்யும். அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா' என்று கவுண்டமணி பாணியில் ஜோக்கடித்தார் அவர். இந்த நண்பர் அரசாங்கக் கட்சியின் தீவிர ஆதரவாளர்!

கிழக்குத் தேர்தலில் பல்வேறு விதமான சுவாரசியங்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் மு.கா. சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர் அப்பிரதேசத்தின் மு.கா. அமைப்பாளரான உவைஸ் என்பவராகும். இவர் கடந்த காலங்களில் பல்வேறு தேர்தலுக்கு முகம் கொடுத்தவர். இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 500 இற்கும் குறைவான வாக்குகளையே பெற்றவர். ஆனால், கிழக்குத் தேர்தலில் தான் போட்டியிட்டே தீரவேண்டுமென்று தலைவர் ஹக்கீமிடம் இவர் அடம்பிடித்துக் கேட்டுக் கொண்டதால் இவருக்கு இம்முறை அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இருந்தும் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த உவைஸ் எனும் நபர் மிக மோசமாகத் தோல்வியடைந்தவர்களின் பட்டியலுக்குள் அடங்கிப் போய்விட்டார். இவரால் வெற்றிபெற முடியாது என்பதும், ஆகக் குறைந்தது அக்கரைப்பற்றில் இவரால் அமைச்சர் அதாஉல்லாவை எதிர்த்து ஒரு தூசியைக் கூடத் தூக்கிப் போட முடியாது என்பதும் மு.கா. தலைவர் உட்பட கட்சியிலுள்ள எல்லோருக்குமே மிகத் தெளிவாகத் தெரிந்த விடயமாகும். இன்னும் விளக்கமாகக் கூறினால் தன்னால் இவைகள் எதையும் செய்ய முடியாது என்று குறித்த நபருக்கே தெரியும். அப்படித் தெரிந்து கொண்டும் ஏன் அடம்பிடித்து இவர் அபேட்சகர் ஆனார் என்பது சற்று உறுத்தலாகவே உள்ளதாகக் கூறுகின்றார் அப்பிரதேசத்து நண்பர் ஒருவர். சரி, உவைஸ்தான் "சின்னப்புள்ள'த்தனமாக அப்படிக் கேட்டுவிட்டார் என்பதற்காக, தலைவர் ஹக்கீம் அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுவதா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா என்று இவ்விடயம் குறித்துக் கோபப்படுகிறார்கள் அம்பாறை மாவட்ட மு.கா. ஆதரவாளர்கள் பலர்!

அக்கரைப்பற்றில் போட்டியிட்ட மு.கா. வேட்பாளர் உவைஸ் என்பவர், தேர்தலன்று அப்பிரதேசத்தில் "தலை'யே காட்டவில்லையென்றும், வெளியூர்களுக்குச் சென்றே வாக்குக் கேட்டதாகவும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

மு.கா. சார்பாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நபீல் எனும் நபரொருவரே போட்டியிடுவதாக இருந்தது. கடைசிவரை வேட்பாளருக்கான சந்தர்ப்பம் இவருக்கே வழங்கப்படும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதி நிமிடங்களில் தலைவரிடம் உவைஸ் அடம்பிடித்ததால் அந்த சந்தர்ப்பம் நபீலிடமிருந்து நழுவி, உவைசிடம் மாறியது. ஆனால், நபீல் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தால், அக்கரைப்பற்றில் தேர்தல் "சூடு' பிடித்திருக்கும் என்கின்றார்கள் அப்பிரதேச மு. காங்கிரஸ்காரர்கள்!

உண்மையாகக் கூறினால், இம்முறை வேட்பாளர் தெரிவில் மு.கா. தலைமை "கறாராக' நடந்து கொள்ளவேயில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்த நினைத்தால், நிர்வாகம் செய்ய முடியாது என்பதை தலைவர் இனியாவது உணர வேண்டும். கட்சியின் நன்மை கருதி செயற்படும் போது, சிலரின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகலாம் அதற்கெல்லாம் கவலைப்படக்கூடாது என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் முன்னாள் மு.கா. பிரதேச சபை உறுப்பினரொருவர்!

அமைச்சர் அதாஉல்லாவைப் பொறுத்தவரை, அவர் கிழக்குத் தேர்தலுக்கு முன்னர் வரை, தனியாளாக நின்றே இப்பகுதியில் அரசியல் செய்துகொண்டு, அவரின் கட்சியையும் வளர்த்து வந்தார். அதாவது, அரசியலில் பதவி வகிக்கும் சகாக்கள் அவர் சார்பில் எவருமிருக்கவில்லை. முன்பு பிரதியமைச்சர் மர்ஹும் அன்வர் இஸ்மாயில் இருந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் அதாஉல்லா, தனிமரமாகித்தான் போயிருந்தார். ஆனால், இப்போது அம்பாறையில் மூன்று மாகாணசபை உறுப்பினர்களைத் தனது கட்சி சார்பில் பெற்றிருக்கின்றார். திருகோணமலையில் வெற்றிலைச் சின்னத்தில் தெரிவானோரில் ஒருவரும் அமைச்சர் அதாஉல்லா தரப்பு நபர் என்று தான் அறிய முடிகிறது. ஆக, இனி அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் பலம் இன்னும் அதிகரிக்கும். அது மு.காங்கிரசுக்கு மிகக் கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என்பதே நிலைவரம் சொல்லுகின்ற சேதியாகும்!

அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற்ற அமைச்சர் அதாஉல்லாவின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் அதாஉல்லாவின் தலைமையில் கடந்த திங்கட்கிழமையன்று வெற்றி ஊர்வலமொன்றை நடத்தினர். அக்கரைப்பற்றிலிருந்து மருதமுனைவரை சென்ற இந்த ஊர்வலக்காரர்கள் திரும்பிவரும் போது, இவர்கள் மீது கல்முனையில் சிலர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் சிலருக்கு காயமேற்பட்ட அதேவேளை, வாகனங்களும் சேதமடைந்திருக்கின்றன. இந்த சம்பவம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளிலெல்லாம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மு. காங்கிரஸ்காரர்கள் பலருக்கு இது இனிப்பான செய்திதான்.

No comments: