Wednesday, 7 May 2008

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி விவாதம்

சேது சமுத்திர திட்ட வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக அமைந்து விடும் என்று கூறினார்.

சேது சமுத்திர திட்ட வழக்கு

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கோரி இந்து அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் இதேபோன்று மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன்சால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்பிரமணியசாமி ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் விடுதலைப்புலிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக அமைந்து விடும் என்று இந்திய கடற்படை தளபதியும், கடலோர காவல் படை இயக்குனரும் எச்சரித்து இருப்பதை புறக்கணித்து விடக்கூடாது. மேலும் இப்போது உள்ள திட்டப்படி சேதுக் கால்வாயை அமைத்தால் கப்பல்கள் எளிதில் செல்வதற்கு உகந்ததாக இருக்காது என்று நிபுணர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு அதை புறக்கணிக்கிறது. அப்படி புறக்கணித்தால் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக அமைந்துவிடும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் விடுதலைப்புலிகள் தங்கள் தளத்தை கேரளாவில் உள்ள கொச்சிக்கு மாற்றுவதற்கு உதவி செய்வதாக அமைந்துவிடும். ஏனெனில் அவர்கள் கொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எளிதில் சென்றுவிட முடியும்.

மத நம்பிக்கை

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுமானால், அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் 80 கோடி இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை மீறியதாக அமைந்து விடும்.

இந்த பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும் இரட்டை நிலையை மேற்கொள்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போது, அது மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று தமிழக அரசு கூறியது. இந்த வழக்கு தொடர்பான ராமர் பாலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். இந்த உண்மையை மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

விசாரணை

இப்போது உள்ள திட்டப்படி சேது கால்வாய் தோண்டினால் அந்த பணி முடிவற்றதாகி விடும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் எந்த கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது அந்த கம்பெனிகளை நிர்வகிப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியசாமி வாதாடினார்.

நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் குறுக்கிட்டு பேசுகையில்; கடலுக்குள் இருக்கும் பாலத்தை வழிபாட்டு தலமாக கருத முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதுபற்றி நேற்று தனது வாதத்தின் போது பேசிய சுப்பிரமணியசாமி; "நாம் சூரியனை வணங்குகிறோம். அதற்காக யாரும் சூரியனிடம் செல்வது கிடையாது'' என்று கூறினார்.

இந்து முன்னணி

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் சார்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார்.

அவர் வாதாடுகையில்; சேது சமுத்திர திட்ட கால்வாய் திட்டத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்தை 4-வது வழித்தடத்தில் செயல்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறினார். இந்த திட்டத்தை உருவாக்கிய ராமசாமி முதலியாரும் 6-வது வழித்தடத்தை பரிந்துரைக்கவில்லை என்றும் 2006-ம் ஆண்டில்தான் 6-வது வழித்தடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

1 comment:

ttpian said...

subramanian swamy-a racist bramin,who will ring bell on the cat?