(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது).
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானா"-வின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?
அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....
அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்... அதனால் தான் எழுதவில்லை........ ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது. ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?
இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா? இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடை படுமே என்றுதான் அப்போது எழுதவில்லை. எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும். அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள்.
பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே!
அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில். முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......
அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....
அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த எண் பழைய நினைவுகளும், இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிகளுக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா,
என் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே......
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.
வலி கலந்த நம்பிக்கைகளுடன் தம்பி யாழினியனுக்காக
அண்ணன் கை.அறிவழகன்
thank you:adikaalai.com
1 comment:
what to do,we are in tamilnadu and we have half boiled, selfish politicians!
Hereafter tigers can supply arms to naxals&ulfa:otherwise china&pakisthan will do> to avoid this,tigers can help india by way of supplying arms to naxals&Ulfa!
Post a Comment