கட்சியிலிருந்து பிரிந்துசென்ற ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் 10 பேருக்கும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியமைக்காக ஆளும் கட்சியால் அரசாங்கச் செலவில் பாரிய அளவில் ஆதாயங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரமாகச் செயற்படப்போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்த ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் தமக்கு அமைச்சர்கள் அனுபவிக்கும் வசதிகள் வழங்கப்படவேண்டுமெனக் கோரியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு மிகவும் நெருக்கமான இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் அச்சல ஜெயகொட, பாராளுமன்ற கடிதத்தலைப்பில் ஆடம்பரமான தங்குமிடமொன்றை வழக்குமாறு கோரி பொதுவிவகார அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு கடந்த ஏப்பிரல் 26ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சவுக்கு ஏற்கனவே ஒரு வசதியான தங்குமிடமொன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து பிரிந்துசென்று ஒரு வாரத்துக்குள் அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விமல் வீரவன்சவின் பாதுகாப்புக்கு கொமாண்டோப் படையினர் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இரகசிய உடன்படிக்கைக்கு அமையவே ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment