Sunday, 11 May 2008

பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி

*`தேர்தல் மாற்றத்தை தராது'-- அவநம்பிக்கையில் மக்கள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு புதிய உதயத்திற்கான சமிக்ஞையென அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ள போதிலும் நேற்று சனிக் கிழமை இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களும் வாக்கு மோசடிகளும் பீதியும் பதற்றமுமான நிலைமையே அங்கு தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான அறிகுறியாகக் காணப்படுகிறது.

தேர்தல் தமக்கு மாற்றம் எதனையும் கொண்டுவரப் போவதில்லையென்ற அவநம்பிக்கையே மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

`நான் இதனை நம்பவில்லை முன்னரும் இவ்வாறு கூறக்கேட்டிருக்கிறேன். எமக்கு சமாதானம் தேவை. எமது பிள்ளைகள் கொண்டு செல்லப்படுவார்களென்ற பீதியின்றி நாம் உறங்குவதற்கு விரும்புகின்றோம்' என்று வாழைச்சேனையிலுள்ள தேர்தல் காவடியொன்றில் வாக்களித்துவிட்டு திரும்பிச் சென்ற போது 50 வயதுடைய கண்ணகி என்ற பெண் கூறியுள்ளார். பயத்தினால் தனது பெயரை மட்டுமே அப்பெண் கூறியுள்ளார்.

18 வருடங்களுக்கு முன்னர் கண்ணகியின் கணவர் பொலிஸ் சோதனைச் சாவடியருகே காணாமற் போய்விட்டதாகவும் உயர்நிலைப் பாடசாலையில் கற்ற தனது இரு மகன்மாரையும் அங்கு செல்லவிடாமல் நிறுத்தி வேறு இடத்துக்கு தான் அனுப்பிவிட்டதாகவும் ஏனெனில், பலவந்தமாக போராளிகள் தனது மகன்மாரை படையணிக்கு சேர்த்துவிடுவார்களென்ற அச்சத்தாலேயே அவ்வாறு அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொடுக்க சீதனமோ அல்லது வீடோ தன்னிடம் இல்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது பெயரைக் கூறிய அவர் முதற்பெயரை கூற மறுத்துவிட்டார். நான் பெயரைக் கூறினால் இரவில் நான் காணாமற் போகக்கூடும். இப்படித்தான் இங்கு என்று அவர் தெரிவித்திருக்கிறார். வன்முறைகள், பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாகவுள்ளது.

எமது பிள்ளைகள் கடத்தப்படாத நிலைமையே எமக்குத் தேவை என்று மேசன் வேலை செய்யும் 48 வயதுடைய ஒருவர் ஏ.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். அவர் தற்போது வேலைவாய்ப்பின்றி இருக்கிறார். அவருடைய பெயரைக் கேட்டபோது, `இங்கு என்ன நடக்கின்றது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது' என்று அவர் கூறியுள்ளார்.

No comments: