இலங்கையின் பாராளுமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை திடீரென ஜனாதிபதியால் ஏன் ஒத்திவைக்கப்பட்டதென்ற கேள்விக்கு இன்றுவரை சரியான விளக்கங்களோ, பதில்களோ கிடைக்காத நிலையில் அது தொடர்பாக யூகங்களும் சந்தேகங்களுமே தற்போது வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வழமை போன்றே மே மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் ஆரம்பமாகி அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு 76 மேலதிக வாக்குகளால் சபையும் அங்கீகாரம் வழங்கிய நிலையில் மாலை 4.30 மணியளவில், மறுநாள் காலை 9.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்து அன்றைய அமர்வை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையிலேயே அன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி தனது அரசியலமைப்பு உறுப்புரை 70 உபபிரிவு 3 ஐ பயன்படுத்தி விசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு விடுத்தார். ஒத்திவைக்கப்படுவதாக மட்டுமே அறிவிப்பு விடுத்த ஜனாதிபதி ஏன், எதற்காக என்ற காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்ல. மே மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 9 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்திருந்தனர். இந்நிலையில் கிழக்குத் தேர்தல் வேலைகளுக்காக 6 ஆம், 7 ஆம் திகதிகள் மட்டுமே பாராளுமன்றத்தை கூட்டவேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா 4 தினங்களும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாகவிருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி அமைச்சர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏனெனில், பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதானால் அதனை அன்று காலையில் சபாநாயகர் மூலமாகவே செய்திருக்கலாம். அதைவிடுத்து நள்ளிரவு அறிவித்ததன் மூலம் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதென்பது ஜனாதிபதியால் திடீரென எடுக்கப்பட்ட முடிவென்பது புலனாகின்றது. அத்துடன், பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் முடிவை சபாநாயகர் மூலம் அறிவித்திருந்தால் தற்போது எழுந்துள்ள விமர்சனங்கள், விசனங்கள், சந்தேகங்களையும் ஜனாதிபதி தவிர்த்திருக்கலாம். ஆனால், அவ்வாறின்றி தனக்குள்ள அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததுடன் அது தொடர்பான எந்த விளக்கங்களையும் இன்றுவரை வெளியிடாததே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரான 6 ஆவது பாராளுமன்றமே தற்போதுள்ளது. இதன் முதலாவது அமர்வு 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 2005 நவம்பர் 21 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது அமர்வு 2005 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இந்த இரண்டாவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 ஆவது அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, 4 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி ஆரம்பமாகி 9 தினங்களின் பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று, பிரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் 2001 ஜூலை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருந்த நிலையில் இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டமை அப்போது அரசியல் அரங்கில் கடும்வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அப்போதிருந்த ஒரு நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு உறுப்புரை 70, உபபிரிவு மூன்றின்படி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் மற்றும் கூட்டுதல் தொடர்பான அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு. இந்த சட்ட விதிகளின்படி ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை 2 மாத காலத்துக்கு மட்டுமே ஒத்திவைக்க முடியும். அவ்வாறு ஒத்திவைக்கும்போது அடுத்த பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் தினத்தையும் அறிவிக்க வேண்டும். எனினும், அவ்வாறு குறிக்கப்பட்ட தினத்திற்கு முன்னைய தினம் ஒன்றில் பாராளுமன்றம் மீளக் கூட்டப்படுவது தொடர்பான அறிவித்தலை விடுக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடமே உள்ளது. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டு குறைந்த பட்சம் மூன்று தினங்களின் பின்னரே, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்ட முடியும். அவ்வாறு கூட்டப்படும் பாராளுமன்றத்தை அன்றைய தினமே ஒத்திவைக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடமேயுண்டு. ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்போது பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் செயலிழந்து விடும். அவை பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது புதிதாகவே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்படும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே தற்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளமை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணசபை தேர்தலில் வன்முறைகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் வடக்கில் பெரும் எடுப்பிலான படை நடவடிக்கையொன்றை முப்படைகளும் முன்னெடுக்க தயாராகவுள்ள நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதே பல சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. பாராளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் உடன்பாடிருந்ததாக குற்றஞ்சாட்டிய ஐ.தே.க., அது தொடர்பில் பாரியளவிலான பிரசாரங்களை முன்னெடுத்ததுடன் இந்த இரகசிய உடன்பாடு தொடர்பில் உண்மையை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும்படி கோரிய பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலம் இது செயலிழந்து போயுள்ளது. பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க ஹித்துல்கொடவின் நியமனம் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. இந்நிலையில் அவரின் தற்காலிக நியமன காலமான 14 நாட்கள் முடிவுறும் நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி அடுத்து எடுக்க வேண்டிய முடிவும் அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் போட்டிருந்த திட்டமும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததனால் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளன. மூத்த அமைச்சர்கள் பலரை பல கோடி ரூபா ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கவைத்துள்ள பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராயும் பாராளுமன்றக் குழு மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான பாராளுமன்றக்குழு போன்ற நிலையியல் குழுக்கள் ஜனாதிபதியால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் செயலிழந்து போய்விட்டன. இதனால், இக் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர்கள் தற்காலிக விடுதலை பெற்றுள்ளனர். தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அமைச்சர்களை தனது கையுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவையினாலேயே ஜனாதிபதி இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவோடு இணைந்து அரசு மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள், வன்முறைகளை அம்பலப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தயாரானதன் விளைவாகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இறுதி அமர்வின் போதும் ஐ.தே.க.பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் செயற்படும் பல புகைப்படங்களை சபாநாயகரின் பார்வைக்கு வைத்ததுடன் எதிர்வரும் நாட்களில் இன்னும் ஆதாரங்களை தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அரசு தெரிந்துகொண்டதால் அதன் விளைவாக அரச தரப்பினர் பலர் எதிர்க்கட்சிப் பக்கம் தாவலாம் என்பதால் அதனை தடுக்கவும் கிழக்குத் தோல்வியினால் ஏற்படப்போகும் அவமானத்திலிருந்து சிறிது காலத்துக்கு தப்பியிருக்கவுமே பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்தார். அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை செய்வதற்கும் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வாய் திறக்கக்கூடாதென்பதற்காகவுமே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது என்பன போன்ற கருத்துக்களே வெளியிடப்படுகின்றன. அரசின் ஊழல் மோசடிகள் அம்பலமாவதை தடுத்தல், கிழக்கில் தேர்தல் வன்முறைகளை முன்னெடுத்தல், பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகம் நியமன சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருதல், அரசுக்கெதிரான சட்டமூலங்களை செயலிழக்கச் செய்தல், அரச தரப்பினர் எதிர்க்கட்சிப் பக்கம் தாவுவதை தடுத்தல் போன்ற அரசியல் சந்தர்ப்பவாதமும் அரசியல் அனுகூலமுமான விடயங்களுக்காகவே பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதேவேளை, வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு வசதியாகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது, வடக்கில் பெரும் போர் நடவடிக்கையொன்றுக்கு முப்படையினரும் தயாராகி வருகின்றனர். எவ்வேளையிலும் வடபோர்முனை அரங்குகளில் போர் வெடிக்கலாம். புலிகளை இவ்வருடத்துக்குள் அழிப்பதாக கங்கணம் கட்டியுள்ள இராணுவம் கொடூரமான தாக்குதல்களை வடக்கு மீது தொடுக்கும். இவ்வாறான நிலையில் இதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகளும் பல்வேறு வழிகளில் பல்வேறு யுக்திகளில் உக்கிர தாக்குதல்களை கொடுப்பார்கள். இதனால், இருதரப்புக்கும் பேரழிவு ஏற்படும். பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்படுவார்கள். உடைமைகள், சொத்துக்கள் அழிக்கப்படும். பொது இடங்கள், மக்கள் வாழ்விடங்கள், ஆலயங்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகும். இலட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயர வேண்டியேற்படும். இவ்வாறானதொரு போர் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் போது அதன் தாக்கம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். உயிரிழப்புகள், சொத்து, உடைமை சேதங்கள், அழிவுகள் பாராளுமன்றத்தில் அம்பலமாக்கப்படும். ஒவ்வொரு கட்சியும் அரசுக்கெதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். சத்தியாக்கிரகங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களென பாராளுமன்றம் குழப்பநிலைக்குத் தள்ளப்படும். இதனால், அரசுக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி ஏற்படும். போர் செய்திகள் தொடர்பாக ஊடகங்களை, மிரட்டல்கள், செய்தித் தணிக்கைகள் மூலமாக அரசினால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், தகவல்களை அரசினால் எந்தச் சட்டம் கொண்டும் தடுக்க முடியாது. பாராளுமன்றத்தை சபாநாயகரை தவிர தணிக்கை விதிகளால் கட்டுப்படுத்த முடியாது. எனவே தான் ஒரு பெரும் போர் நடவடிக்கைக்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். ஜனாதிபதியால் பாராளுமன்றம் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஒரு தரப்பினர் அரசியல் காரணங்களைக் கூறுகிறார்கள். இன்னொரு தரப்பினர் இராணுவ நடவடிக்கையை கூறுகின்றார்கள். ஆனால், பாராளுமன்றம் எதற்காக ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது என்பது தொடர்பில் அரசிலுள்ள மூத்த அமைச்சர்கள் பலருக்கே விளக்கமில்லாத நிலையுள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் தற்போது எடுத்துவரும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளால் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி முழு நாடுமே குழம்பிப் போயுள்ளது.
AUTHOR:தாயகன்
Sunday, 11 May 2008
பாராளுமன்ம் திடீர் ஒத்திவைப்பு பின்னணிக் காரணம் என்ன?--அது தொடர்பாக யூகங்களும் சந்தேகங்களுமே தற்போது வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment