picture thanks:shankarlaal
இலங்கை யின் குடியரசுத்தினம் இன்று (மே 22) அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற அனைத்து அரசாங்க கட்டடங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகள் திணைக்களங்கள் ஆகியவற்றிற்கு நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
1948 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் புகுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்தது. புதிய அரசியலமைப்பின் தேவையை உணர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 1972ஆம் ஆண்டு இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்கினர்.
1972ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள், இலங்கையின் குடியரசு தினமாக கருதப்படுகிறது.
இந்த அரசியல் யாப்பு பிரபல கம்யூனிச வாதி என அறியப்பட்ட இரண்டு கலாநிதிப் பட்டங்களை தனதாக்கிக் கொண்ட கொல்வின் ஆர் டீ சில்வாவினால் வரையப்பட்ட யாப்பாக கருதப்பட்டது.
இலங்கையின் கம்யூனிச இயக்கங்களின் வரலாற்றில் குறிப்பாக பெரும்பான்மையினரை தலைமைத்துவமாகக் கொண்ட கம்யூனிசக் கட்சிகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய முன்னணிகளை அமைத்து இனவாதத்திற்கு துணைபோன வரலாறே அதிகம் வகையில் எண்ணி எடுக்கக் கூடிய ஒருசிலரைத் தவிர கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா என்.எம் பெரேரா, பீட்டகெனமன், பெற்றிவீரக்கோண், வாசுதேவ நாணயக்கார, மறுபுறம் றோகண விஜயவீர, சோமவன்ச அமரசிங்க தற்போதைய அத்தாவுதசெனிவிரட்ண, பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஈறாக அனைவரும் பேரினவாதிகளுக்கு துணைபோன சந்தர்ப்பவாதிகளாகவே விளங்கினார்கள், வளங்கிவருகிறார்கள்.
அந்த வகையில் சோல்பரி யாப்பில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான காப்பீடுகளளையும், குறிப்பாக 29 ஆவது சரத்து, செனட்சபை முதலான ஏற்பாடுகளையும் இல்லாது ஒழித்து இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசிய நாடு என்ற பிரகடனத்தை இந்த யாப்பே ஏற்படுத்தியது.
யாப்பு புரட்சி எனக் கூறப்பட்டதனால் பாராளுமன்றத்திற்கு புறம்பாக நவரங்கல மண்டபத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் ஒன்று கூடலில் இந்த யாப்பு பிரகடணப்படுத்தப்பட்டது. எனினும் இதனை தமிழரசுக் கட்சியும் ஐக்கியதேசியக் கட்சியும் புறக்கணித்திருந்தன.
சிறுபான்மையினருக்கு எதிரான யாப்பு எனக் கூறி தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்ட போதும் அது புறக்கணிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சிறீமாவோ பண்டாரநாயக்காவைத் தலைமையாகக் கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தமைமையில் இடதுசாரிக் கட்சிகள் கைகோர்த்து உருவாக்கிய இந்த அரசியல் யாப்பே இலங்கை வரலாற்றில் முதன் முதல் சட்டரீதியாக சிறுபான்மையினர் இரண்டாதரப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.
எஸ்.டபிள்யூ பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்தி தொடக்கி வைத்த இனவாத நெருப்பை பின் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா அணையாது பாதுகாத்தார்.
அதற்கு இடதுசாரிகள் எண்ணைவார்த்தனர். பின்னர் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கி ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதனைத் தவிர தன்னால் எதனையும் செய்யக் கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏற்படுத்தி முன்னவர்களின் பணியை திட்டமிட்டு செவ்வனே நிறைவேற்றினார் ஜே.ஆர் ஜெயவர்த்தனா
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த கொடியேற்றும் நிகழ்வு எவ்வாறு அமையப் போகின்றது என்பதே கவனத்திற்குரியதாக உள்ளது.அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்தினர் கொடியேற்றுவதை உறுதிப்படுத்துவார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கும்.
அரசாங்கம் வெறுமனே கொடியேற்றுவதன் மூலம் மக்கள் மீதான தனது இறையான்மையை பெற்றுக் கொள்ள முடியாது. கொடியேற்றுவதற்கு முன் தன் மக்களின் அடிப்படை உரிமைகளையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவது அவசியம்
source:குளோபல் தமிழ்செய்தி

No comments:
Post a Comment