Wednesday, 7 May 2008

ஆயுதக் களைவுக் கோரிக்கை – ஐ.தே.க. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது:

கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தாலும், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பதிலாக மேலும் பல ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் இவர்களையும் கைதுசெய்தால் மேலும் ஆயிரக்கணக்கானோர் கைதாக தயராக உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆயுதங்களை களையும்படி கூறுபவர்களை கைதுசெய்வதாகவும் ஆயுதம் தாங்கிய குழுக்களை அரசாங்கம் கைதுசெய்ய மறுப்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மட்டக்களப்பில் நேற்று துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட 23 வயதான பாலசுந்தரம் என்ற இளைஞர் பாதுகாப்பு செயலாளரின் பணிப்புரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

No comments: