நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகருத்திருக்கின்ற நிலையில், அரசாங்க செலவினங்களும் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றினை எல்.எம்.டி சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
" நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கின்றபோதிலும், எல்லோரும் ஒரு விடயத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களின் சமூக, மத, நம்பிக்கைகள் எவ்வாறிருப்பினும், எம்மிடம் பேசிய 80 வீதமான மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்" என எல்.எம்.டி சஞ்சிகையின் மே மாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவினம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று நீங்கள் கருதுகிறீர்களா எனும் கேள்விக்கு 81 வீதமானோர் 'ஆம்' எனவும், 15 வீதமானோர் 'இல்லை' எனவும் பதிலளித்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவினம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதா எனும் கேள்விக்கு, 49 வீதமானோர் 'ஆம்' எனவும், 39 வீதமானோர் 'இல்லை' எனவும் பதிலளித்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக அரசாங்கம் அதிக தொகை நிதியினைச் செலவிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா எனும் கேள்விக்கு 51 வீதமானோர் 'இல்லை' எனவும், 43 வீதமானோர் 'ஆம்'எனவும் பதிலளித்துள்ளனர்.
அரசாங்க செலவினங்களுக்காக அதிகமான நிதி செலவிடப்படுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா? எனும் கேள்விக்கு 83 வீதமானோர் 'இல்லை' எனவும், 7 வீதமானோர் 'ஆம'எனவும் பதிலளித்துள்ளனர்.
நாட்டின் மாதிரி சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு யுத்தம்தான் காரணம் எனக் கருதுவதாகவும், ஏனையவர்கள் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியும், மசகு எண்ணெயின் விலை அதிகரிப்புமே காரணம் எனக் கருதுவதாகவும் இந்த மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, நாட்டில் உச்ச நிலைக்குச் சென்றுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க செலவினங்களைக் குறைக்கவேண்டும் என 81 வீதமானோரும், ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டும் என 50 வீதமானோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment