இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறியிருப்பதால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.
கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கப் படைகள் தொடர்ச்சியான படுகொலைகள், கைதுகள், காணாமல்போதல்கள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியதாகவும், மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்களை அனுமதிப்பது பற்றிக் கலந்துரையாடக்கூட இலங்கை விரும்பவில்லையெனவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநாடுகோரிப் போராடிவரும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச அதிகாரிகள் இலங்கைக்குச் சென்றால் அவர்களைத் தனிப்பட்ட ரீதியில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் தாக்கிப் பேசுகின்றனர் எனவும், நல்லெண்ணத்துடன் முன்வைக்கப்படும் பிரேரணைகளை இலங்கை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை விடயங்களை மேம்படுத்துவதைவிட இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படும் மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் கேள்விகளை எழுப்ப வேண்டுமென அந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரியுள்ளன.
மனித உரிமைச் சட்டங்களை மதிக்கும் நாடுகளுக்கு மாத்திரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளாகும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு அந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment