Tuesday, 13 May 2008

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்ற செய்தியைக் கேட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக வெளியான செய்தியைக் கேட்டதும் மட்டக்களப்பின் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனது தாய், சகோதரனுடன் சென்று வாக்களித்திருந்த அன்டனி (பாதுகாப்புக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிள்ளையான் தலைமையிலான நிர்வாகம் அமையப்போவதாக வெளியான செய்தியைக்கேட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் 12 வயது தங்கை இந்த வருட ஆரம்பத்தில் இனந்தெரியாத நபர்களால் கடத்திச்செல்லப்பட்டிருந்ததால், பிள்ளையான் குழுவினர் ஆட்சிக்குவந்தால் கிழக்கின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிடும் எனவும், தனது தங்கையைப்போல பல சிறுவர், சிறுமிகள் கடத்திச்செல்லப்படுவார்கள் எனவும் அவர் கவலையடைந்திருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளைவானில் சென்ற இனந்தெரியாத நபர்கள் 12 வயதுடைய அன்டனியின் தங்கையைக் கடத்திச்சென்றுள்ளனர். தங்கையில் மிகுந்த பாசம் வைத்திருந்த அன்டனி தனது படிப்பை இடைநிறுத்திவிட்டு தங்கையைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு என அவர் ஏறி இறங்கியதாகவும் அன்டனியின் தயாரான லக்ஷ்;மி அந்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

“யார் எனது மகளைக் கடத்திச்சென்றார்கள் என்பது தெரியாவிட்டாலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே கடத்திச் சென்றதாக அன்டனி நம்பியிருந்தார். அதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையானுக்கு வாக்களிக்க வேண்டாமென எமது பகுதி மக்களுக்கு அவர் கூறிவந்ததுடன், அவ்வாறு பிள்ளையானுக்கு வாக்களித்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் எச்சரித்திருந்தார். எனினும், நாம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை” என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றிபெற்றதாக செய்தி வெளியானதைக் கேட்ட அவர், மிகவும் ஆவேசமாக நடந்துகொண்டதுடன், அவரைக் கொல்லப்போவதாகவும் எச்சரித்துள்ளார். சிறிது நேரத்தில் நண்பர்களைச் சந்தித்து வருவதாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். எனினும், சிறிது நேரத்தில் அன்டனியின் நண்பர்கள் இருவர் அவருடைய வீட்டுக்குச் சென்று அன்டனி மணிக்கட்டுப் பகுதியில் இரத்தம் வெளியேறி மயங்கி இருப்பதாகக் கூறியுள்ளனர். அதன் பின்னர் அன்டனி அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறியதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: