யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான பரமநாதன் மகேந்திரன் (36) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு நிலையத்துக்குச் சென்ற இனந்தெரியாதநபர்கள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ் பூங்கனி சோலையின் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பணம்கோரி மிரட்டியவர்களே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் பயணிகள் கப்பல்கள் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சென்றடைவதற்கு முன்னர் நடுக்கடலில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே துறைமுகத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
இதனால் கப்பல்கள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தரித்துநிற்கவேண்டி ஏற்படுவதாகவும், அதன் பின்னர் கடற்படையினர் சென்று சோதனையிட்டு பயணிகள் இறங்குவதற்கு நீண்டநேரம் ஏற்படுவதாகவும் யாழ் தகவல்கள் கூறுகின்றன.
கப்பல் மூலம் யாழ்ப்பாணம் சென்று மீண்டும் திரும்புபவர்கள் கடற்படையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டபின்னரே கப்பலிலிருந்து இறங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரியவருகிறது. இதனால் கப்பல்மூலும் யாழ்ப்பாணம் செல்லும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment