Saturday, 10 May 2008

முகமாலைச் சமரில் படையினருக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திய "சமாதானம்" ஏறிகணைகள்: "சண்டே லீடர்"


அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சமாதானம்" என்னும் சொல்லை மிகவும் நகைச்சுவையாக களத்தில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளுக்கு விடுதலைப் புலிகள் சூட்டியுள்ளனர்.

மோட்டார் எறிகணைகள் மற்றும் வான் குண்டுகளுக்கு எல்லாம் புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த எறிகணைகள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் நாள் நடைபெற்ற முகமாலைச் சமரிலும் அரசிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

53 மற்றும் 55 ஆவது படையணிகள் விடுதலைப் புலிகளின் முன்னணி அரணை அடைந்த போது விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பித்ததுடன் 82 மி.மீ, 152 மி.மீ, 130 மி.மீ எறிகணைகளும் சரமாரியாக ஏவப்பட்டன.

இந்தச் சமரில் விடுதலைப் புலிகள் 1,000-க்கும் அதிகமான எறிகணைகளை ஏவியிருந்தனர்.

இதனால் மணிக்கு 30-40 பேரை இராணுவம் இழந்திருந்தது.

53 ஆவது படையணியே 80 விகிதமான இழப்பை சந்தித்திருந்தது. விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளில் சிலவற்றை சோரன்பற்றுப் பகுதியில் வைத்து இயக்கியிருந்தனர்.

இந்தச் சமரில் பயன்படுத்திய தமது சொந்தத் தயாரிப்பு மோட்டார் எறிகணைகளை விடுதலைப் புலிகள் படையினருக்கு அருகில் வைத்தே பயன்படுத்தியிருந்தனர்.

"சமாதானம்" எறிகணைகள் 2 கி.மீ. தூரவீச்சுக் கொண்டது. சிலர் அதன் தூரம் மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் விடுதலைப் புலிகள் மிக அதிகளவில் எறிகணைகளைப் பயன்படுத்தியது, அவர்கள் புதிதாக எறிகணைகளை தருவித்துள்ளதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"சமாதானம்" எறிகணைகள் விடுதலைப் புலிகளின் மூன்றாம் தலைமுறை எறிகணைகள் ஆகும்.

விடுதலைப் புலிகள் எறிகணைகளை உருவாக்கும் தமது முயற்சியை 1980-களில் ஆரம்பித்திருந்ததாக றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த எறிகணைகளின் பெயர் "பாபா".

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் "பசீலன்-2000" எறிகணைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுத ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட "பசீலன்-2000" மோட்டார் 25 கி.கி நிறையுடைய எறிகணையை 1 கி. மீ தூரத்திற்கு வீசத்தக்கது.

விடுதலைப் புலிகளின் இந்த தொழில்நுட்பப் பிரிவை குட்டிச்சிறீ, மணி, ஒலிவர் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்களை ராஜூ வழிநடத்தி வந்தார்.

வடமாராட்சிப் பகுதியில் உள்ள வல்லிபுரம் பகுதியிலேயே இந்த எறிகணைகள் முதலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.

இரண்டாவது சோதனை வட்டுக்கோட்டை வயல் வெளியில் நடத்தப்பட்டது. எனினும் அது வெற்றிபெறவில்லை.

மூன்றாவது சோதனை கீரிமலைப் பகுதியில் நடத்தப்பட்டது அது வெற்றி பெற்றிருந்தது. இந்த சோதனைகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீடியோவில் பார்வையிட்டிருந்தார். அதற்கு லெப். கேணல் குட்டிச்சிறி பொறுப்பு வகித்திருந்தார்.

1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ். கோட்டை முற்றுகையில் விடுதலைப் புலிகள் அதனைப் பயன்படுத்தியிருந்தனர். பின்னர் பலாலி தளம் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

"பசீலன்-2000" எறிகணைச் செலுத்திகளை விடுதலைப் புலிகள் உழவு இயந்திரத்தில் பொருத்திப் பயன்படுத்தியிருந்தனர்.

படையினர் தமது எறிகணைச் செலுத்திகளைக் கண்டறிவதைத் தவிர்க்கும் முகமாக விடுதலைப் புலிகள் ஆட்டிலெறிப் பீரங்கிகளைக் கூட வாகனங்களில் பொருத்தியே பயன்படுத்தியிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: